தமிழகத்தில் நாளை மாலை முதல் ஊரடங்கு.. எதற்கு அனுமதி, எதற்கு தடை.. விரிவான அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் நாளை மாலை முதல் ஊரடங்கு.. எதற்கு அனுமதி, எதற்கு தடை.. விரிவான அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் வகையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் “மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் அத்தியாவசிய மற்றும் அவசரப்பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.

குறைந்த பணியாளர்கள்

வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மளிகை கடை இயங்கும்

அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். அத்தியாவசியப்பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது” என்றார். அத்துடன் மாலை விரிவான அறிவிக்கை வெளியிடப்படும் என்றார். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டீ கடையில் கூட்டத்துக்கு தடை

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ” கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை விதிக்கப்பபட்டுள்ளது. டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை. பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதிக்கப்படுகிறது.

உணவங்கள் இயங்கலாம்

கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள் செயல்படும். வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. கடந்த 16ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமணங்கள் நிறுத்தப்பட நேர்ந்தால் அதற்கான முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திரும்ப அளித்தாக வேண்டும். அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது.

பிளஸ் 2 தேர்வு நடைபெறும்

அனைத்து கல்லூரி, வேலைய்வாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஊழியர்களை அலுவலகம்/ வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், அரசுப் பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் 1 வரை கட்டுப்பாடு

5பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை. அனைத்து டாஸ்மாக், மதுக்கடைகளும் :மூடப்படுகிறது றிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் மூடப்படும் 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் திறந்திருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளில் வரிசையில் நிறுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவர். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 வரை அமலில் இருக்கும்.

COMMENTS