‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்

‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்

2020 இன் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றிருக்கும் LOUISE GLÜCK என்பவரை நேற்றுவரை நான் அறிந்திருக்கவில்லை. 77 வயதான இந்த அமெரிக்க படைப்பாளி இதுவரை 15 கவிதைத்தொகுப்புகளையும், ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1968 ம் ஆண்டு இவருடைய முதலாவது கவிதைத்தொகுப்பு ‘Firstborn’ வெளிவந்தது. இவர் பல விருதுகளை வென்றிருந்தாலும் நோபெல் பரிசு இவரைச் சுற்றிப் பாரிய ஒளிவெள்ளத்தை இப்போது பாய்ச்சியிருக்கிறது. முழு இலக்கிய உலகின் பார்வை இவரைச் சுற்றித் திரும்பியிருக்கிறது. உலகின் மூலை முடுக்கில் பலரைப் போல, நேற்றிரவு முழுவதும், இவரைப் பற்றிய தகவல்களைத் தேடி நானும் இணையத்தளங்களை மேய்ந்தேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவரது கவிதைகள், நாம் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்வியல் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்தச் சிறப்புத் தன்மையும், எளிய சொல்லாடல்களுமே இவருக்கு நோபெல்பரிசை வென்று தந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் தன் சொந்தக் குரலில் வாசித்து அவர் பதிவு செய்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் குரலில் அவரின் ஆக்கத்தை கேட்பது ஒரு சுகானுபவம். சமூக வலைத்தளங்களில் உள்ள அவருடைய சில பதிவுகளை நேற்று வரை குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். நேற்று நோபெல்பரிசை அவர் வென்ற பின், நாளை அந்த எண்ணிக்கை அதிகமாகும். அவர் படைப்புகள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். நோபெல்பரிசின் மகத்துவம் தனித்துவமானது.

‘The Wild Iris’ (காட்டுக் கருவிழி) என்ற கவிதைத்தொகுப்பில் இருந்து நான் சுவைத்த சில வரிகள் …
கவனிக்கவும்!
என் அறிவுக்கு எட்டியவரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன். சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்காமல் அவர் சொல்ல வந்த உணர்வுகளை முடிந்தவரை என் வார்த்தைகளால் விளக்கியிருக்கிறேன். வேறு ஒருவர் இதைவிட சிறந்த மொழிபெயர்ப்போடு வரக்கூடும். அப்போது அதற்கு வழிவிட்டு விலகிக்கொள்வேன். அதை மனதார ரசிப்பேன். அதுவரை…

‘வெள்ளி லில்லிப்பூக்கள்’ (The Silver Lily)
****************************************
அந்த இரவுகள் மீண்டும்
குளிர்மையாகின்றன,
இலைதுளிர்காலத்தின்
ஆரம்ப இரவுகள் போல,
மீண்டும் நிசப்தம் சூழ்கிறது.
பேச்சு உன்னை
இடையூறு செய்யுமா?
இப்போது
நாங்கள் தனிமையில்;
அமைதிக்கான
தேவை எங்களுக்கில்லை.

தோட்டத்தின் மேலே வானத்தை
உன்னால் பார்க்க முடிகிறதா?
அந்த முழு நிலவு எழுகிறதே
அடுத்து வரும் முழுநிலவை
நான் பார்க்கப் போவதில்லை

இலைதுளிர்காலத்தில்,
முழுநிலவு எழுகையில்,
நேரம் முடிவில்லாதது
என்றுணர்த்தியது.
பனித்துளிகள் விழுந்து
திறந்து மூடின,
மேப்பிள் விதைக்கொத்துகள்
வெளிர்நிறத்தில் சொரிந்தன,
வெண்மைக்கு மேல் வெண்மை,
பேர்ச்மரத்திற்கு மேலாக
நிலா எழுந்தது,
மரம் பிரியும் அந்த வளைவில்
மீண்டும் உயிர்த்தெழும்
லில்லி இலைகள்
மென்பச்சை கலந்த
வெள்ளியாய் பிரகாசிக்கின்றன.

அச்சம் தரும் முடிவை நாடி
வெகு தூரம் நாம்
ஒன்றாக வந்துவிட்டோம்.
இந்த இரவுகளில்
நான் நிலை தடுமாறுகிறேன்,
முடிவின் அர்த்தம் அறிவேன்.
நீ ஒருவனுடன் இருந்திருக்கிறாய்
முதல் அழுகைக்கு பின்னர்
மகிழ்ச்சியும், அச்சத்தைப் போலவே,
எந்த ஒலியையும் எழுப்பவில்லையா?

மொழிபெயர்ப்பு: மோகன்

The Silver Lily By LOUISE GLÜCK

The nights have grown cool again, like the nights
of early spring, and quiet again. Will
speech disturb you? We’re
alone now; we have no reason for silence.

Can you see, over the garden—the full moon rises.
I won’t see the next full moon.

In spring, when the moon rose, it meant
time was endless. Snowdrops
opened and closed, the clustered
seeds of the maples fell in pale drifts.
White over white, the moon rose over the birch tree.
And in the crook, where the tree divides,
leaves of the first daffodils, in moonlight
soft greenish-silver.

We have come too far together toward the end now
to fear the end. These nights, I am no longer even certain
I know what the end means. And you, who’ve been with a man—

after the first cries,
doesn’t joy, like fear, make no sound?

COMMENTS