அம்மன்கோயில் உண்டியல்.

அம்மன்கோயில் உண்டியல்.

நல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல்லாம் அவசர அவசரமாய் பதட்டத்தோட மரப்பொந்பொந்துக்குள்ள ஓடி ஒளியினம். காத்தால அஞ்சு மணிக்கு தொடங்கின மழை, பின்னேரம் அஞ்சு மணி ஆகப்போகுது இன்னும் விட்டபாடில்லை.

இந்தக் காத்து வேற வேட்டியை உருவிக்கொண்டு போறமாதிரியல்லோ அடிக்குது. பொன்னம்மான் குடையை எடுத்துக்கொண்டு வாசிகசாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். வந்தவர், நடேசம்மான்ர கடையைக் கடக்கவும், முன்வீதியாலை சரவணத்தார் வரவும் சரியாய் இருந்திது. அவர் காத்தோடை மல்லுக் கட்டிக்கொண்டு, ஒரு கையாலை குடையையும், பொடிமட்டையையும், பிடுச்சுக்கொண்டு, மற்றக்கையால கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில உறிஞ்சிக்கொண்டு “என்ன பொன்னம்மான் கூட்டத்துக்குத்தானே?” கேட்டவர் பதிலுக்கு காத்திருக்காமலே, “என்ன விசயம் இண்டைக்கு உந்த மழைக்குள்ள கூட்டம் கூடினம்…ஏதோ சீரியஸ் மற்றராத்தான் இருக்கோணும்…என்ன நினைக்கிறீர்?”. “என்னெண்டு எனக்கும் விளங்கேல்லை…காத்தாலே கார்த்திகேசு மாஸ்டர் வீட்டுக்கு முன்னாலே பொலிஸ்ஜீப் ஒண்டு நிண்டதாக் கேள்வி… வாருமன் போய்த்தான் பாப்பமன்…” எண்டு சொன்னபடி பொன்னம்மான் எட்டி நடந்தார். ‘வேக நடைப்போட்டி’ எண்டு ஒண்டு வச்சா சரவணத்தாரை அடிக்க இஞ்ச ஒரு பிள்ளை இல்லை! ஏதோ குளிக்கிற பிள்ளையை கிணத்துக்கட்டில இருத்திப்போட்டு சவுக்காரம் எடுக்க வீட்டுக்குள்ள போனவர் மாதிரி ஒரு அவசரம். அவர் நடக்கிற “ஸ்டைலை” பின்னாலே இருந்து பாத்தால் ஏதோ பாரம் ஏத்தின மாட்டுவண்டியின்ற, ஒருபக்க அச்சாணி கழன்ற சில்லு, சுழலிற மாதிரியிருக்கும்.

கிடு கிடுவெண்டு நடந்து இரண்டு பேரும் வாசிகசாலைக்கு வந்திட்டினம்.கிட்டத்தட்ட இருபது பேர்.. முக்கியமான அம்மன் கோயில் நிருவாகசபை  அங்கத்தவர் எல்லோரும் நிக்கினம்.  நிருவாகசபைத்தலைவர் கார்த்திகேசு மாஸ்டர் முகத்திலே வழக்கமா இருக்கிற சந்தோசத்தைக் காணேல்லை. சரவணத்தார் நினைச்சமாதிரி விசயம் சீரியஸ்தான் போல.

“என்ன மாதிரி…..எல்லோரும் வந்திட்டினம் போல…கூட்டத்தைத் தொடங்குவம் எண்டுநினைக்கிறன்…”  கார்த்திகேசு மாஸ்டர் தன்ர வெண்கலக் குரல்ல பேசத்தொடங்கினார். “நேர விசயத்துக்கு வாறன். எங்கடை அரசடி அம்மன்கோயில்ல நேற்றைக்கு ராத்திரி களவு போயிருக்கு. உண்டியல்பூட்டை உடைச்சு களவு நடந்திருக்கு. உண்மையச் சொன்னால், ஒரு மாதத்துக்குள்ள இது மூண்டாந்தரம். இந்தமுறை அம்மன்ர   நகைநட்டெல்லாம் அடிச்சிட்டாங்கள்”.

நாங்கள் விசயத்தை வெளியில விடேல்லை, காரணம் எங்கடை அயல்ல சின்னப் பொடியள் யாராவது தெரியாமல் செஞ்சிருந்தால் விசயம் பொலிஸ் வரைக்கும் போறதை நாங்கள் விரும்பேல்லை. பொடியள்ன்ர எதிர்காலம், அதோடை சம்பந்தப்பட்ட குடும்பத்தோடை மானம் எல்லாத்தையும் யோசிச்சித்தான் இந்த முடிவை எடுத்தனாங்கள். ஆனால் இனி பொலிசுக்கு போறதுதான் ஒரேவழி எண்டு நினைச்சு அவயளுக்கு அறிவிச்சனாங்கள். அவையளும் காத்தாலை வந்து பாத்திட்டு படமெல்லாம் எடுத்துக்கொண்டு போயிருக்கினம். யார்ல சந்தேகம் எண்டு கேட்டதிக்கு எங்களால ஒருத்தற்ற பேரையும் சொல்ல முடியேல்லை. யாருக்கும் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுங்கோ”. மாஸ்டர் கதைச்சு நிப்பாட்டினதும், கோழியிறகு விழுந்தாலும் சத்தம் கேக்கிறமாதிரி ஒரு அமைதி! கொஞ்ச நேரம் ஒருத்தரும் ஒண்டும் சொல்லேல்லை. ஆளையாள் முகத்தைப்  பாத்துக்கொண்டு இருந்திச்சினம். இதுவரைக்கும் ஒண்டும்  பேசாமலிருந்த சரவணத்தார் இப்ப தொடங்கினார். “மாஸ்டர் நீங்கள் எங்கட பொடியளப்பற்றி பிழையாய் கணக்கு போட்டு வைச்சிருக்கிற மாதிரியல்லோ உங்கட கதையிருக்குது!”. சரவணத்தாரோடை குரலில அரைக்கரைவாசி கடுப்பும் நக்கலும் கலந்திருந்திது. உண்மையச் சொல்லப்போனால் போன வருச நிருவாகசபைக் கூட்டத்திலயிருந்து சரவணத்தாருக்கு கார்த்திகேசு மாஸ்டர்ல கொஞ்சம் கறள்தான். அவற்ற தலையை உருட்ட இப்ப வாச்ச சந்தர்ப்பத்தை விட அவர் தயாராயில்லை!

இதுவரைக்கும் ஒண்டும் பேசாமலிருந்த பொன்னம்மான் கூட்டம் சூடு பிடிக்கிறதப் பார்த்திட்டு நிலைமையை சமாளிக்க யோசிச்சு, ” மாஸ்டர் யோசிச்சதிலையும் பிழை மாதிரி தெரியேல்லை. என்ன இருந்தாலும் இளந்தாரிப்பொடியளோடைதான் பள்ளிக்கூடத்தில அவற்ற சீவியம் போகுது. அவருக்கு அவங்கடை வாலும் தலையும் நல்லாத் தெரியும்தானே.  இப்ப விசயம் பொலிசின்ர கைக்கு போயிற்றுது. பாப்பம் என்ன நடக்குது எண்டு” இதைக் கேட்டதும் சரவணத்தாரோடை கோவம் இப்ப பொன்னம்மான் மேல தாவிற்றுது. ” உமக்கும் மூண்டு பொடியள் இருக்கிறாங்கள். அதை மறந்திட்டீர் போல…..” சரவணத்தாருக்கு நாப்பது வருச சிநேகிதன் பொறுத்த நேரத்தில கைவிட்டமாதிரி இருந்திது. கடுப்போட பொன்னம்மானைப் பார்த்தார். அவர் அதைக் கவனிக்காதமாதிரி மேல நிமிர்ந்து வாசிகசாலை கூரையைப் பார்த்தார். ஒருவரும் தன்னைப் பாக்கேல்லை எண்டு வலு சுவாரிசியமாய் கூட்டத்தைப் பாத்துக்கொண்டிருந்த கொழுத்த எலி ஒண்டு, பரபரத்து, பாய்ந்து விழுந்து, ஓடி வளையொண்டிலை ஒளிஞ்சு கொண்டார். மூண்டு, நாலு செக்கன் பொறுத்து, எலிப்பிள்ளை மொள்ளத் தலைய நீட்டிஎட்டிப்பார்க்க, பொன்னம்மான்ர பார்வையைத் திரும்பவும் சந்திச்சவர் சடாரெண்டு தலையை உள்ளுக்க இழுத்துக்கொண்டார். எலிப்பிள்ளையைப் பொறுத்தமட்டில் கூட்டத்தின்ர பார்வையாளர் அந்தஸ்து இதோட பறி போட்டுது!

ஒருமாதிரி அவர், இவர் எண்டு ஒவ்வொருவரும் ஒவ்வோண்டைச் சொல்லி கூட்டமும் முடிய, மழையும் நிண்டிட்டுது. சரவணத்தார் பொன்னம்மானை விட்டிட்டு தனிய வெளிக்கிட்டிட்டார். அவருக்கு கோவம் இன்னும் தணியேல்லை. பொன்னம்மான், கார்த்திகேசு மாஸ்டரோடை கதைச்சுக்கொண்டே அம்மன்கோயில் வரைக்கும் வந்திட்டார். மாஸ்டர் கோயில்திறப்போடைதான் வந்தவர். பொன்னம்மானை உள்ளுக்க கூட்டிக்கொண்டு போய் உண்டியல், உடைச்ச பூட்டுகள் எல்லாத்தையும் காட்டினார். மூண்டு பூட்டும் ஒரே ‘கொம்பெனிமொடலா’வும் அதோடை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாயும் உடைக்கப்பட்டிருந்திது. அதெல்லாத்தையும், கூட கோயிலையும் சுத்திப்பாத்தார்.மூண்டு மாதத்துக்கு முதல் வெள்ளையடிச்ச சுவர், லைட் வெளிச்சத்தில ‘பளிச்’ ‘பளிச்’ எண்டிருந்திது. பொன்னம்மான் யோசனையோடை வீட்டுக்கு திரும்பினார். அந்தக்காலத்து “மற்றிக்குலேசன்” படிச்ச அவற்ற மூளை வேலைசெய்யத் தொடங்கிட்டுது.

ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதின ’பெரி மேசன்’, ஆர்தர்  கோனன் டொய்ல் எழுதின ’ஷெர்லொக் ஹோம்ஸ்’  கதைகள் எல்லாம் அம்மான் படிச்சவர் எண்டால் கேக்க வேணுமோ. பூட்டெல்லாம்  ஒரே மாதிரி உடைச்சிருக்கிறதாலே கள்ளன் ஒரே ஆளாத்தான் இருக்கவேணும். அதோடை ஒரு பூட்டை உடைச்சால் ஏன் அதே மாதிரியான பூட்டையே திரும்பவும் ரெண்டு தரம் பூட்டவேணும்? சுவரில யாராவது ஏறி இறங்கினதுக்கான அடையாளம் ஒண்டும் இல்லையே? எங்கயோ உதைக்கிதே? கோவில் பிரச்சனையை யோசிச்சுக் கொண்டு படுத்தவர் அப்பிடியே நித்திரையாப் போனார்.

பொழுது விடிஞ்சதும் பொன்னம்மான் மொள்ள எழும்பினார்.தெய்வானையக்கா தந்த கோப்பியை ரசிச்சு குடிச்சார். அவவுக்கு கோவில் விசயத்தைச் சொன்னார். மனுசி திகைச்சுப் போனா. “யாருக்கு அம்மன்ர நகைநட்டில கைவைக்க துணிவு வந்தது? நாசமாப் போனவங்கன்ர கையை முறிச்சு சுடுதண்ணி அடுப்பில வைக்கோணும்.” கோவத்தில சொன்னா. மனிசிக்கு தேகமெல்லாம் ஒரு படபடப்பு. “சரி…சரி.. விடணை! பொலிசிக்கு இப்ப அறிவிச்சாச்சு. அவங்கள் கள்ளனைப் பிடிச்சுப்-போடுவாங்கள் நீ யோசிச்சுக் கொண்டிருக்காத…சோலியைப் பார் புள்ள. நான் ஒருக்கா பட்டணம் போவேணும் எங்கடை பாங் சேவிங்ஸ் புத்தகத்தை கொண்டா புள்ள. அதோடை உன்ர உடைஞ்ச ரெண்டு காப்பையும் கொண்டா, சிவங்கோவிலடி மணியம் பத்தரிட்ட குடுத்து, அழிச்சுப்போட்டு புதுசா ஒரு சோடி காப்பு செய்வம். நான் ஒம்பது மணி பஸ்ஸைப் பிடிக்கோணும். கொஞ்சம் சுடுதண்ணி வை புள்ள குளிச்சிட்டு வெளிக்கிடுவம்”.

பொன்னம்மான் பறந்து விழுந்து பஸ்ஸைப் பிடிச்சு பட்டணம் வந்தார். பாங்க் அலுவலை முடிச்சுக்கொண்டு      எட்டி  நடந்து, கஸ்தூரியார் வீதியால மணியம் பத்தரின்ர பட்டடைக்கு வர நேரம் பதினொண்டாப் போச்சு. பத்தர் நல்ல “மூடில” இருந்தார் போல உடனை பொடியன் ஒருத்தனை ‘தாமோதர விலாசுக்கு’ அனுப்பி சுடச் சுட வடையும், பால்தேத்தண்ணியும் எடுப்பிச்சுத் தந்தார். அளவெட்டி ஊர் நிலவரம் எல்லாம் விசாரிச்சார். வந்த விசயத்தைச் சொல்லி காப்பு ரெண்டையும் குடுக்க, பத்தர் அதை வாங்கி நிறை பாத்தார். நிறையை உரக்கச் சொல்லி நோட்டுப்புத்தகம் ஒண்டில குறிச்சுக்கொண்டார்.

எல்லாத்தையும் கதைச்சு முடிச்சுக்கொண்டு போக எழும்பின பொன்னம்மான்ர கண்ணில மூலையில சாத்தியிருந்த அந்த வெள்ளைக்குடை பட்டிட்டிது. சடாரெண்டு போய் அதைக் கையில எடுத்துப் பார்த்தார். சந்தேகமில்லை குடை நான் நினைச்ச ஆளின்றதான்! அவர் பத்தரிட்ட ஏதோ அதைப்பற்றி கேக்க நினைக்கவும், கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வயசு மதிக்கத் தக்க ஒரு இளம் மனுசி பத்தரைத் தேடி உள்ளே வரவும் சரியாய் இருந்திது. வந்த மனுசிக்கு என்ன அவசரமோ பொன்னம்மானும் மணியம் பத்தரும் கதைச்சுக்கொண்டு இருந்ததைக் கூடகவனிக்காமல், என்ன மணியம் பத்தர்சொன்ன சாமான் ரெடியோஎடுக்கலாமோ?” என்றா. இதை கொஞ்சமும் எதிர்பாராத மணியம் பத்தர் அந்த மனிசியையும் பொன்னம்மானையும் மாறி மாறிப் பார்த்து,  திரு திருவெண்டு முழிச்சார். ஆனால் உடனேயே நிலைமையைச் சமாளிச்சுக்கொண்டு  “என்னம்மா இன்னிக்கி புதன்கிழமை ஆச்சே வெள்ளிக்கிழமைதானே தாறதா சொன்னேன்” எண்டதும், அவ வெள்ளிக்கிழமை வாறதா சொல்லிப்போட்டு போயிட்டா. வந்த மனிசி பாக்க சும்மா கண்ணுக்கு குளிர்ச்சிதான், ஆனா அவவின்ரபோக்கு அம்மானுக்குத் துப்பரவாய்ப் பிடிக்கேல்லை. அந்த நடையில என்ன ஒரு நளினம்!

பொன்னம்மானுக்கு மனசில கேள்விகளாயிருந்த சில முடிச்சுக்கள் இப்ப கொஞ்சம் கொஞ்சமா அவிழத்  தொடங்கிச்சு. அளவெட்டி அம்மன்கோவில் விசயங்களை மணியம் பத்தருக்கு ஒன்றுவிடாமச் சொன்னார். வெள்ளைக்குடைப்பிடியில K.K எண்டு வெட்டின எழுத்தை வைச்சு, அது உறுதியாய் கார்த்திகேசு மாஸ்டரிண்ட தான் எண்டும் சொன்னார். பத்தருக்கு கை கால் எல்லாம் வெட வெடவெண்டு நடுங்கத் தொடங்கிட்டுது. கார்த்திகேசு மாஸ்டர் போன கிழமை தன்னட்ட வந்தது தொடக்கம் நடந்த எல்லாத்தையும் விபரமா மணியம் பத்தர் சொன்னார். ஒரு சின்னப் பெட்டி நிறைய நகைகள் கொண்டு வந்து காட்டினார். பெட்டியில இருந்த நகைகள் சம்பந்தமான விபரமான ஒரு குறிப்பையும் காட்டினார். அவ்வளவும் கோவில் நகைகள் எண்ட உண்மை தெரிஞ்சதும் மணியம்பத்தர் தலையில கைவைச்சுக்கொண்டு சுவரோடை சாஞ்சு இருந்திட்டார். இந்த நகையின்ற பெறுமதிக்கான காசை வாங்கத்தான் இப்ப அந்த மனுசி வந்து போனதாவும் சொன்னார். மனிசின்ர வீடு ஈட்டில இருக்கு. அதோட மனுசி கொட்டடியில நல்ல விலாசமானவ. அவவுக்கும் மாஸ்டருக்கும் உள்ள தொடர்பை கேட்டதும்தான் மாஸ்டர் அடிக்கடி பட்டணம் வந்து போற ரகசியம் பொன்னம்மனுக்கு விளங்கிச்சுது. “மாத்துக் கோவணத்துக்கு வழியில்லை, ஆனா கோமானுக்கு கோட்டையில கொடி பறக்க வேணுமாம்! எப்பிடியிருக்கு கதை!”.

இந்த கோவில் பிரச்சினையை நல்லபடியா முடிச்சு வைக்கவேணும் எண்டு முடிவெடுத்தார். பொலிசும் இப்ப இதில சம்பந்தப்பட்டிருக்கிறதால மணியம் பத்தர் தன்ர முழு “சப்போட்டும்” தாறதாவும் சொல்லிப்போட்டார். தன்ர பேர் வெளியில வராம பாத்துக்கொள்ளச் சொல்லி மண்டாட்டமா வேண்டிக் கொண்டார்.

அடுத்த நாள் அளவெட்டியில பொழுது விடிஞ்சா, “அழகற்ர தேத்தண்ணிக்கடை”, வாசிகசாலை, சங்கக்கடை, நடேசம்மான்கடை, தெருச்சந்தை, அம்பனைச்சந்தி எண்டு எங்கபாத்தாலும் ஒரே கதைதான்! அம்மன்கோவில்ல களவு போன நகையள், காசு எல்லாத்தையும் கள்ளன் திரும்ப கொண்டு வந்து உண்டியல்ல போட்டுட்டானாம்!அம்மன்ர மகிமையோ மகிமைதான்! தெய்வானையக்காவின்ர சந்தோசத்துக்கு அளவேயில்லை. வாற வெள்ளிக்கிழமை கோயில் ஒரு பொங்கல் போடப்போறா. கார்த்திகேசு மாஸ்டர் ஒரு பெரிய கப்பல்வாழைக்-குலையோட சைக்கிள்ல வந்து இறங்கினார். கண்ணாலே தாரை தாரையா கண்ணீர் வடியுது. காலில விழாத  குறையா பொன்னம்மானைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டார். பொன்னம்மான் மனசுக்குள்ள நினைச்சார்,   ‘தண்ணியும் மூண்டு பிழை பொறுக்கும்! இந்தா பிடியும் உமக்கு இன்னொரு ஒரு சான்ஸ் தாறன்!’

ஒரு கிழமைதான் போயிருக்கும், மணியம் பத்தர் ‘சுப்பர்’ வேலைப்பாடோடை ஒரு சோடி காப்பு சகிதம், பொன்னம்மான்ர வீடு தேடி, அளவெட்டிக்கே வந்திட்டார். காப்புச் செய்த கூலியை வாங்க அடியோடி மறுத்திட்டார். அவர் போனபிறகு காப்பை நிறுத்துப்பாத்தா குடுத்ததிலும் ஒரு அரைப்பவுண் நிறை கூடுதலா இருக்கு!
தெய்வானையக்காவுக்கு ஒண்டும் விளங்கேல்லை! பொன்னம்மான் காதில இருந்த சுருட்டை எடுத்தார். பத்த வைச்சார். ஒரு புன்முறுவலோடை, ஆட்டுக்குட்டி ‘மோடையனை’ தூக்கி மடியில வைச்சுக்கொண்டு கயித்துக்கட்டில்ல போய் இருந்தார். இலேசா வீசுற வேப்பமரக்காத்து வெறும் உடம்பில பட அவருக்கு சுகமாத்தான் இருந்திது! பொன்னம்மான்ர மனசுக்குள்ள ஒரு நினைவோட்டம்….

“மன்னிக்கப்படுறதிலையும் பாக்க மன்னிச்சு விடுறதில உள்ள சந்தோசம் அலாதிதான்!”

மோகன்

2010-12-05

(Visited 76 times, 1 visits today)

COMMENTS