நீண்ட காத்திருப்பு! – கொமடோர் அஜித் போயகொட

நீண்ட காத்திருப்பு! – கொமடோர் அஜித் போயகொட

powered by Sounder

19.09.1994 அன்று ஸ்ரீலங்கா கடற்படையின் சாகரவர்த்தனா போர்க்கப்பல் மன்னார் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. நான்கு கரும்புலிகளின் உயிர்கள் பலியாக,இரண்டு கடற்படையினர் கடலில் தத்தளிக்கும் நிலையில் உயிருடன் பிடிபடுகின்றனர். அரசாங்கத்திற்கு ஆயுதங்களும் பெறுமதியான கப்பலும் இழப்பு ஏற்பட்டது.இந்தச் செய்தியை அப்போது நாளிதழில் படித்திருந்தேன். பொதுமக்களாகி நாம் அதை எப்படி நோக்கினோம்-உணர்ந்தோம் என்பதையும் இப்புத்தகத்தில் போயகொட சம்பவங்களைச் சொல்லும் போது அப்பொழுதிற்கும் எழுதப்பட்ட சம்பவங்களுக்குமாகத் தொடர்புகள், அன்றைய சூழ்நிலை எனச் செய்திகள் நினைவுக்கு வருகின்றன. சிறை வைக்கப்பட்ட இடங்கள், கிளாலிப்பாதை, பத்திரிகைச் செய்திகள், புலிகளால் சிறை வைக்கப்பட்ட பொதுமக்களின் மீதான சித்திரவதைகளுக்கும் இவர்களது பராமரிப்பிற்குமான வேறுபாடுகள் என இதைப்படிக்கும் போது அறிந்த விடயங்களை அசை போடுகின்றது மனம்.

கடற்படை அதிகாரி போயகொட உட்பட இன்னும் சிலரும்,சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மாதாமாதம் பார்வையிடப்படுகின்றனர். உணவுப்பொருட்களுக்கும் உறவினருடனான தொடர்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலாலி விமானத்தளத் தாக்குதலில் படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ள கெனடிக்குப் பதிலாகக் கைமாற்ற வேண்டிய பெறுமதியான கைதி என்பதால் பராமரிப்பும் மோசமில்லை. ஆனால், புலிகளது சிறைகளில் ஏனைய தமிழ்க் கைதிகளுக்கும் பிடிக்கப்பட்ட சாதாரண தரத்திலிருந்த இராணுவத்தினருக்கும் ‘கவனிப்பு’ வேற மாதிரி என்பதையும் தான் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் சுற்றி நடந்தவற்றை அவதானித்ததிலிருந்து குறிப்பிட்டுள்ளார் அஜித் போயகொட.

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியைப் பற்றி புலிகளாகிய சிறைக்காவலாளிகள். இராணுவ-கடற்படைக் கைதிகளுக்குச் சொல்கிறார்கள்(இவ்விரு பகுதியும் சேர்ந்து கிரிக்கட் விளையாடுவதும் நடக்கிறது.) ‘ஸ்ரீலங்கன் ரீம்’ என்று நாட்டின் புதிய பெயரைச் சொல்லமாட்டார்கள்.ஆனால், அந்த அணியைத் தான் ஆதரித்தார்கள். சனத் ஜெயசூரிய,அர்ஜுன ரணதுங்கவின் பெரிய விசிறிகள்’ என்கிறார் போயகொட.
123 ம் பக்கத்தில் ஒரு சுவாரசியமான- எதார்த்தமான விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
காவலாளிகள் பொக்கற் ரேடியோக்களை வைத்திருந்து ஸ்கோர் நிலவரத்தை இவர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.’ஸ்ரீலங்கா வென்றதும் எங்களுடன் சேர்ந்து சிறைக்காவலாளிகளும் உற்சாகக் குரலெழுப்பினார்கள்’ என்றொரு தருணத்தைப் பதிவு செய்கிறார். அன்று அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இலங்கையர்களாக உணரும் சந்தர்ப்பமானது மிக இயல்பாக நடக்கிறது. கைதிகளான படையினரும் காவலாளிகளான புலிகளும் ஸ்ரீலங்காவின் கிரிக்கெட் வெற்றியை எதிர்கொண்ட புள்ளி எது? சிங்களவன்-தமிழன் என்று மட்டுமே இனவெறுப்பாக எல்லாவற்றையும் பேசுபவர்களால் இதை உணர்வது கடினம். அதுவன்றி,ஏதோவொன்று இந்த இனவெறுப்புகளையும் மீறி அங்கு உறவுகளைத் தொடர்கிறது. தொலைவிலிருந்து போர்…போர் என அறைகூவுபவர்களாலும் சிங்களவன்,சிங்களத்தி என்று ஒட்டுமொத்தமாக இனவெறுப்பை உமிழ்பவர்களாலும் இம்மனநிலையை உணரமுடியுமா? ஆனால், அது போன்ற பலவும் மனிதர்களிடையில் நடக்கின்றன.இந்நூலில் இப்படிப் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன.

‘வடலி’ வெளியீடான இந்நூலை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்தவர் தேவா

COMMENTS