யாருக்கு யார் எமன்?

அந்த சிறிய குளத்தில், தாமரையிலை ஒன்றிலிருந்த அந்த ஆண்தவளை சுற்றும் முற்றும் பார்த்தது. தலைக்கும் உடலுக்கும் இடையே கழுத்து என்று ஒன்று இல்லாததால் முழு உடலையும் திருப்ப வேண்டிய சங்கடம் அதற்கு. சற்று தூரத்தில் தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு பூச்சி தனது எட்டுக் கால்களையும் பரப்பி நடை பழகிக் கொண்டிருந்தது. தவளையின் மூளை தன் வேலையைத் தொடங்கியது. இடைத்தூரம், பூச்சியின் அசைவுகள், உடலளவு, தாக்குதல்நேரம், காற்றுவீசும் திசை, வீசும்வலு எல்லாம் நுட்பமாகக் கணிக்கப்பட்டன. தவளை பாய்ச்சலுக்கு தயாரானது.

முன்னங்கால்களை அழுத்தி, பின்னங்கால்களால் பலமாக உந்தி பூச்சியை நோக்கி பாய்ச்சலை தொடங்கியது. அதே கணம், அருகே தத்திச் சென்ற “அழகான” பெண்தவளை ஒன்று இதன் பார்வையைக் கவர, கவனம் சிதறிப்போகிறது. தொடங்கிய பாய்ச்சல் தொடங்கியதுதான். கணிப்புக்கள் எல்லாம் கந்தலாக, தட்டுத் தடுமாறிய தவளை, தலை குப்புற விழ……….ஏற்கனவே வாய் பிளந்து நின்ற அந்தப் பாம்பு, இன்னும் அகலமாக தன் வாயைப் பிளந்து, தானாகவே வந்து சேரும் விருந்தை வரவேற்றுக் கொண்டது! தூரத்தில் அந்தப் பூச்சி இன்னும் நடை பழகிக் கொண்டிருந்தது.

மோகன்
2012-03-11

 

COMMENTS