‘மனவுறுதி’

அவன் ஒரு சலவைத்தொழிலாளி. அவனுக்காவே உழைத்து உழைத்து அந்தக் கழுதைக்கு வயதாகி விட்டது. இப்போதெல்லாம் முன்போல அதனால் பொதி சுமக்க முடியவில்லை. இனிமேல் அந்தக் கழுதைக்கு தீனி போடுவதே வீண் விரயம் என்று சலவைத்தொழிலாளி எண்ணினான். கழுதையைக் கொல்ல மனம் வரவில்லை. அதை ஊரெல்லைக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டான். ஆனால் கழுதையோ மறுநாளே அவனிடம் திரும்ப வந்துவிட்டது.

இந்தக் கழுதையை கைகழுவ முடியவில்லையே என்று கோபம் கொண்டான். ஆனாலும் கழுதையைக் கொல்ல அவனுக்கு இன்னும் மனம் வரவில்லை. சலவைத்தொழிலாளியின் வீட்டுவளவில் நீர்வற்றி, பாழடைந்த ஒரு கிணறு இருந்தது. அதை மூடுவததற்கு மண் வாங்கி வைத்திருந்தான். ஒரு அதிகாலை அதை மூடுவதற்கு அவன் நண்பர்கள் சிலர் வந்தார்கள். ஆளுக்கு ஒரு மண்வெட்டியை எடுத்தார்கள். எங்கே கழுதையைக் காணவில்லையே என்று சலவைத்தொழிலாளி தேடினான். முன்னிரவுதான் கழுதை அந்தப் பாழடைந்த கிணற்றில் விழுந்து மயங்கிக் கிடந்தது.

யாருமே அதைக் காணவில்லை. சலவைத்தொழிலாளி மட்டும் அதைக் கண்டுவிட்டான். இதுதான் தருணம் என்று கழுதையைக் கிணற்றோடு சேர்த்து மூடிவிட எண்ணினான். விரைவாக மண்ணை அள்ளி கிணற்றில் போட்டான். தன் மேல் மண் வந்து விழுந்ததும் கழுதை விழித்துக் கொண்டது. தன் நிலைமையை புரிந்துகொண்டது. உயிரை விட அது தயாராயில்லை. சத்தம் போட்டு உதவி தேடினாலும் கிடைக்காது என்று எண்ணியது. தன் முழுப்பலத்தையும் திரட்டி எழுந்தது. ஒவ்வொரு முறையும் தன் மேல் விழுந்த மண்ணை உதறிவிட்டு அதன்மேல் எழுந்து நின்றது. தன்னம்பிக்கையைத் தளரவிடவில்லை. படிப்படியாக கிணறு மண்ணால் நிரம்பியது. கழுதையும் மேலே உயர்ந்து வந்தது. இறுதியில் மண்ணால் நிரம்பிய கிணற்றிலிருந்து கழுதை வெளியே வந்தது.

சலவைத்தொழிலாளியும் அவன் நண்பர்களும் திகைத்துப் போனார்கள். கழுதையும் மெல்ல நடந்துவந்து சலவைத்தொழிலாளியின் காலடியில் அமர்ந்தது. கழுதையின் மனவுறுதியைக் கண்டுகொண்ட சலவைத்தொழிலாளியும் கண்களில் நீர்மல்க, அதை அணைத்துக் கொண்டான். அன்றிலிருந்து அதன் சக்திக்கேற்ப சிறு சிறு பொதிகளையே சுமக்க வைத்தான்.

மூலம்: ஆங்கிலக் கதை

மொழிபெயர்ப்பு: மோகன்

2017-10-20

COMMENTS