மனதை உறைய வைக்கும் ஒரு உண்மைச் சம்பவம்!

மனதை உறைய வைக்கும் ஒரு உண்மைச் சம்பவம்!

பஹீம் சலேஹ் 33 வயதுடைய ஒரு அமெரிக்க இளம் கோடீஸ்வரர். தன் இளம் வயதிலேயே தன்னுடைய அபார தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி பெரும் பணக்காரர் ஆனவர். 23 வயதில் 10 மில்லியன் USD சம்பாதித்திருந்தார். பின்னர் பங்களாதேஷ், கொலம்பியா, நைஜீரியா போன்ற நாடுகளில் தன் நிறுவனங்களை வெற்றிகரமாக அமைத்தார். நைஜீரியாவில் இவர் அறிமுகப்படுத்திய பயணச்சேவை பயன்பாட்டு செயலி மிகப் பிரபலமானது. 13 ந் திகதி யூலை மாதம் அன்று இவருடைய சொத்து மதிப்பு ஏறத்தாள 150 மில்லியன் USD.

யூலை 14 ந் திகதி பஹீமைச் சந்திக்க இவரின் வீட்டுக்கு வந்த ஒரு உறவுக்காரப் பெண், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். நியூயோர்க்கில் உள்ள தன்னுடைய வீட்டில், பஹீம் மிகவும் கோரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் உடல் ஒரு மின்னியங்கி இயந்திரவாளால் துண்டாடப்பட்டிருந்தது. உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்தது. உறவுக்காரப் பெண் வீட்டினுள் நுழைந்தபோது அந்த இயந்திரவாள் தொடர்ந்தும் மின் இணைப்பில் இருந்தது. கொலையாளி வெளியே போய்விட்டு மீண்டும் வந்து தடயங்களை அழித்துவிட திட்டமிட்டிருக்க வேண்டும். உடலை அப்புறப்படுத்த முன் அதிர்ஷ்டவசமாக உறவுக்காரப் பெண் உள்ளே வந்துவிட்டார். இந்த கொலை யூலை 13 ந் திகதி நடைபெற்றிருக்க வேண்டும் என்று பொலிஸார் கருதுகிறார்கள்.

புலன் விசாரணையை சிறப்பாக முன்னெடுத்த பொலிஸார் பஹீமின் உதவியாளன் ஸ்ரைறெஸ் ஹாஸ்பில் என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல முடிச்சுகள் அவிழ்ந்து பல ஆதாரங்கள் ஸ்ரைறெஸ்க்கு எதிராகச் சிக்கியிருக்கின்றன. கொலை நடந்ததிற்கு முதல் நாள் பஹீம் தன் வீட்டுக்கு திரும்பியதுபோது அவர் மின்தூக்கியில் பயணித்தது, அதிலிருந்த அவதானிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. பஹீமுடன் கறுப்பு உடையில், முகமூடியணிந்த ஒருவர் காணப்பட்டிருக்கிறார்.

கொலை எப்படி நடந்திருக்கும் என்று பொலிஸாரின் ஊகம் பின்வருமாறு அமைகிறது.
“கைதேர்ந்த தொழில்முறை கொலைகாரன் ஒருவனால்தான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும் என்று முதலில் கருதினோம். ஆனால் கொலைகாரன் பல முட்டாள்தனமான தவறுகள் செய்திருக்கிறான். எனவே மின்தூக்கியில் முகமூடியுடன் பயணித்தது பஹீமின் உதவியாளன் ஸ்ரைறெஸ் ஆகவே இருக்க வேண்டும். கமெராவின் பார்வையிலிருந்து மறைந்ததும் ஸ்ரைறெஸ் மின்னதிர்ச்சித் துப்பாக்கியொன்றால் பஹீமைத் தாக்கியிருக்க வேண்டும். பஹீமின் உடலை அவர் வீட்டிலிருந்து அகற்ற ஸ்ரைறெஸ் அதைக் கூறு போட்டிருக்கிறான். மறுநாள் உடலை அகற்றி வீட்டைத் துப்புரவு செய்ய வந்தபோதே உறவுக்காரப் பெண் உள்ளே இருந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட தடை காரணமாகவே ஸ்ரைறெஸ் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு பயத்தில் அங்கிருந்து ஓடியிருக்க வேண்டும்”.

பொலிஸாரின் சான்றுகள்:
1. அவதானிப்பு கமராவில் உள்ள பதிவு.
2. மின்னதிர்ச்சித் துப்பாக்கியிலிருந்து தள்ளப்படும் கம்பிகளை அகற்றவில்லை. அதிலிருந்த இலக்கத்தை வைத்து மின்னதிர்ச்சித் துப்பாக்கியின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கலாம். ஸ்ரைறெஸ் சமீபத்தில்தான் இதை வாங்கியிருந்தான்.
3. உடலைக் கூறுபோடப் பயன்படுத்திய மின்னியங்கி இயந்திரவாளின் உரிமையாளன் ஸ்ரைறெஸ்.
4. பஹீமின் வீட்டில் இருந்த துப்புரவு செய்யும் சாதனங்கள், பொருட்களை ஸ்ரைறெஸ் தன் கடனட்டையைப் பாவித்தே வாங்கியிருக்கிறான்.
5. தான் பெருமளவு பணத்தை தன் முதலாளியிடமிருந்து அடிக்கடி கறப்பதாக ஸ்ரைறெஸ் தன் நண்பர்களிடம் பெருமை பேசியிருக்கிறான்.

கொலைக்கான காரணம்:
ஸ்ரைறெஸ் தன் முதலாளி பஹீமிடம் 90 000 USD கடன் வாங்கியிருந்தான். அதைத் தவணை முறையில் திரும்பச் செலுத்துமாறு பஹீம் கேட்டிருந்தார். அதைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் ஸ்ரைறெஸ் இருந்திருக்கிறான். பணத்தை திரும்பப் பெற பஹீம் பெரிதாக ஸ்ரைறெஸை வற்புறுத்தவில்லை. மாறாக அவனுக்குப் பல உதவிகள் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உதவியாளன் ஸ்ரைறெஸ்க்கு எதிராக பலமான ஆதாரங்களும், சாட்சியங்களும் இருப்பதாக நியூயோர்க் குற்றவியல் தலைமை பொலிஸ்அதிகாரி ரொட்னி ஹரிஸ்சன் கருதுகிறார்.

ஆக்கம்: மோகன்
நன்றி: Aftonbladet

 

 

 

 

 

 

COMMENTS