‘பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ற் வீக்’  

சிறுவயது அனுபவங்கள் ….

 
‘பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ற் வீக்’  
 

எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் ஆரம்பக்கல்வி கற்ற யாழ் நாவலர் பள்ளிகூடத்திற்கு எதிரே, மனோகரா படமாளிகைக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எனக்கு வயது பத்து என்று நினைக்கிறேன். திரைப்படமாளிகைகளுக்கு அருகே நானும் என் தம்பி சந்திராவும் அடிக்கடி சுற்றிச் சுற்றி வருவோம். வின்சர் படமாளிகைக்கு வெளியே வெட்டிப்போடுற துண்டு ரீலிசை பொறிக்கி வருவோம். பெரியண்ணா படுக்கிற அகல வாங்கிலுக்கு கீழே அம்மாவோடை சீலையை சுத்திக்கட்டி இருட்டாக்குவோம். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுக்கு துண்டு ரீலிசை வைத்து, ரோர்ச்லைட் அடிச்சு, அசையாத படம் காட்டுவோம். எம்.ஜி.ஆர், சிவாஜி, பத்மினி சம்பந்தப்பட்ட  காட்சிகளைப் பார்த்து அசந்து போவார்கள். கட்டணம் எவ்வளவு தெரியுமா? தலைக்கு இரண்டுசதம்! இதைத்தான் இப்ப வடிவேலு “இன்னா பிலிம் காட்றியா?” என்று சொல்வார்! துண்டு ரீலிஸ் பொறுக்கிறது ஒன்றும் அவ்வளவு சாமானியமான விடயமில்லை! வீட்டில எல்லோருக்கும் தண்ணி காட்டிவிட்டு, சின்னண்ணா பெரியண்ணா மற்றும் அவர்களோடை நண்பர்கள், எங்களோடை சொந்தம் பந்தம் என்ற யார் கண்ணிலும் படாமல், வின்சர் படமாளிகை புரொஜெக்டர்ரூமுக்கு கீழே சாக்கடை நாத்தத்தை சகிச்சுக்கொண்டு, குப்பையைக் கிளறி குண்டுமணி தேடுமாப்  போல…. அந்த வேதனை எனக்கும் சந்திராக்கும்தான் மட்டும்தான் தெரியும்!

இப்படித்தான் அன்று ஒருநாள் நான் தனியே, வெட்டிப்போடப்படும் துண்டு ரீலிசை பொறுக்கப் போனேன்.
மனோகரா படமாளிகைக்கு அருகே காலிலே என்னவோ தட்டுப்பட்டது. எடுத்துப்பார்த்தால் இன்ப அதிர்ச்சி! இரண்டுரூபாத் தாளிலே சில்லறையும் சேர்த்து மடித்தபடி ஒரு பொட்டலம்! பிரித்துப் பார்த்தால் மொத்தமா
ரெண்டு ரூபா 75 சதம். அந்தக்காலத்திலே இது பெரிய தொகை! ஒரு பழைய படம் பார்க்க 35 சதம்!சுடச் சுட ‘தேவிவிலாஸ்’ மசாலாதோசை, சாம்பார் சட்டினியோடு 20 சதம்! வெறும்தோசை 6 சதம்! கீரிமலைக்கு பஸ் ரிக்கற் 25 சதம்!
 
ஏராளம் எண்ணங்கள் மனதில் அலைபாய, திரும்பிப்பார்த்தால் கண்ணுக்கு முன்னால் ஒட்டின வயிற்றோடு
‘ரிக்சாக்கார ரத்னம்’ தன் ரிக்சாவைத் துடைத்துக்கொண்டு இருந்தார். மின்னல்போல ஒரு எண்ணம் மனதிலே! காசு ரத்தினம் தொலைத்ததோ? அவரைப் பார்க்கப் பாவமா இருந்தது. என் திட்டமெல்லாம் தவுடு பொடி! மெல்ல அவரருகில் போய் “நீங்கள் இன்றைக்கு ஏதாவது காசு தொலைச்சீங்களோ?”. உடனே பதில் வந்தது. “ஓம் தம்பி…இரண்டுரூபா நோட்டு ஒண்டைக் காணேல்லை, எங்க போட்டனோ தெரியேல்லை”. அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தாரே உருகிற வெய்யிலிலே, ஓட்டை சப்பாத்தை போட்டுக் கொண்டு ஓடி ஓடி உழைக்கிற ஒரு உண்மையான உழைப்பாளியின் காசை அமுக்கிறதா? மனம் மறுத்தது! மெல்ல பொக்கெற்ல கைவிட்டு, காசுப்பொட்டலத்தை எடுத்து இரண்டுரூபா நோட்டை மட்டும் ரத்தினத்திடம் கொடுத்தேன். 75 சதத்தை மீண்டும் பொக்கெற்ல போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற திருப்தியோடு.
 
வீட்டுக்கு திரும்பியபோது விறாந்தையில் ஐயா, அம்மா, பெரியண்ணா எல்லோரும் கதைத்துக்கொண்டு இருந்தார்கள். இடையில் நான் குறுக்கிட்டு “இப்ப என்ன நடந்தது தெரியுமா?”. நடந்ததை நான் விபரமாய் சொல்லி, 75 சதத்தையும் எடுத்துக் காட்டினேன், பாராட்டுகள் கிடைக்கும் என்று மனதில் எண்ணம். ஆனால் மாறாக எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை! “ம்…ம்…ம்…முட்டாளே! இரண்டுரூபா நோட்டை ரத்னம் தொலைச்சா, அதை எடுத்து 75 சதத்தை அதில சுத்திவச்சு, திரும்பவும் கீழே போட்டது யார்? வடிகட்டின முட்டாளே நல்லாத்தான் ரிக்சாக்கார ரத்னம் உன்னை ஏமாத்தியிருக்கிறான்..” என்றார் ஐயா. எனக்கோ இப்படி ஒரு முட்டாள் போல ஏமாந்து வந்ததை நினைத்து வெட்கம் ஒரு புறம் வேதனை மறு புறம். அம்மா மட்டுமே சற்று ஆறுதல் சொன்னா, “மோகன் உன்னோடை நேர்மையான நோக்கம் நல்லது ஆனா செயல்தான் கொஞ்சம் …”
 
இப்போது இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தால், எனக்கு ஞாபகம் வருவது வடிவேலு ஏதோ ஒரு படத்திலே சொன்ன வசனம் மட்டுமே. “பில்டிங் ஸ்ட்ரோங் ஆனா பேஸ்மென்ற்தான் கொஞ்சம் வீக்!”
 
 
மோகன்
2010-06-26

COMMENTS