‘தேடல்’

இனி எல்லாம் அவன் கையில்தான்…

“தேடினால் கிடைக்கும்!”. ‘கவசாக்கி’ சொன்னது நினைவுக்கு வந்தது. தேடினேன். தொடர்ந்து தேடினேன். அகம், புறம் என்று தேடினேன். கிடைக்கவில்லை.

“களைப்பும், சலிப்பும் ஒரு மோசமான கலவை!” இது ‘யமஹா’ சொன்னது. சிலிர்த்தெழுந்தேன். வாழ்நாள் முழுவதும் தேடுவேன். கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருப்பேன். களைப்பா? சலிப்பா? தேடினேன். ம்ஹீம்! தென்படவில்லை!

“உன்னால் காணமுடியாவிட்டால், வேறொருவரின் அல்லது வேறொன்றின் துணையை நாடு. தேடல் முடிவுக்கு வரும்”. ‘சுஸிக்கி ‘வின் தத்துவம்!  இதுவே என் கடைசித் துருப்புச் சீட்டு.

குளியலறைக்குள் போனேன். கண்ணாடி முன் நின்றேன். கண்டுபிடித்து விட்டேன். இதுவரை தேடிய என்னுடைய மூக்குக்கண்ணாடி நெற்றிக்கு மேலாக தலையில் இருந்தது! “யுரேக்கா..யுரேக்கா” கூவியபடி வெளியே ஓடி வந்தேன். மனைவியும், பிள்ளைகளும் மிரண்டு போனார்கள்!

என் ஆடைகளைக் குளியலறையில் கழற்றி வைத்ததை மறந்து போனேன்.

பிற்குறிப்பு: 

மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இதை வாசிப்பதைத் தவிர்க்கவும்! நான் குறிப்பிட்ட தத்துவஞானிகளின் பெயர்கள் எல்லாம் ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள்!

மோகன்

2017-07-13

 

COMMENTS