சுவீடன் குறும் செய்திகள் 

சுவீடன் குறும் செய்திகள் 

4 வயதுப் பெண்பிள்ளையின் கையில் துப்பாக்கி!

நேற்றிரவு 10 மணியளவில் Växjö காவற்துறைக்கு ஒரு தகவல் வந்தது. 4 வயதுள்ள பெண்பிள்ளை ஒருவர் துப்பாக்கியோடு (Air riffle), ஆட்களைக் குறிவைத்து பொதுமக்கள் குளிக்கும் கடற்கரை ஒன்றில் சுற்றியோடித் திரிந்திருக்கிறார். சம்பவஇடத்திற்கு விரைந்த காவற்துறை அதிகாரிகள் துப்பாக்கியைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பொறுப்பின்றி ஆபத்தான கருவியொன்றை சிறுமியின் கைகளில் கொடுத்த பெற்றோரை விசாரணை செய்கிறார்கள். பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்காக அவர்கள் மேல் வழக்குத் தொடரமுடியும்.

தொடரூந்துகள் ஓடாது!

இன்று காலநிலை அதிவெப்பமாக இருப்பதால், சில தொடரூந்துத் தடங்கள் நெளிவடைத்து பாதிப்படைந்திருக்கலாம். எதிர்பாராத விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு பின்வரும் பயணங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
1. Varberg-Borås
2. Herrljunga-Borås
3. Uddevalla-Strömstad
4. Öxnered-Håkantorp
இந்தப் பிரதேசங்களில் தொடரூந்துத் தடங்கள் பழமையானவை. பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகிறார்கள்.

5 வருடங்களாக பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள்!

Gotland இல் வசிக்கும் இரு பிள்ளைகளை 2015 இலிருந்து அவர்கள் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை. பிள்ளைகளை கல்விகற்க அனுப்பாத குற்றத்திற்காக பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் பாடசாலையில் ஏனைய மாணவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பெற்றோர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வராதமைக்கு  200 Kr / நாள் என்ற கணக்கில் பெற்றோருக்கு 141 600 Kr அபராதம் விதிக்கப்பட்டது. அதைவிட இலைதுளிர்க்காலத் தவணையில் வராமைக்கு 74 800 Kr மேலதிக அபராதம் கட்டும்படியும் பெற்றோர்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள்.

COMMENTS