சிக்கலில் பெரும் சிக்கல் மலச்சிக்கல்!

சிக்கலில் பெரும் சிக்கல் மலச்சிக்கல்!

‘காலைக் கடன்’… இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனைத் தீர்க்காவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `Ready to eat / Fast food’ உணவுகளில் பெரும்பாலானவை, எங்கள் சமிபாட்டு நலனுக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்துமே, எந்த தாமதமும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது.

`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே…’ என்கிறது.

மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் அழுத்தமாகச் சொல்கின்றன.

இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விடயங்கள்…

1. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசி விடயமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக மாறிவிட்டது. இப்படி, “அதுதான் போகுதே… பிறகென்ன?” என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.

2. அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, சமிபாட்டுத்தன்மை சரியாக இருக்கும். வாயுத்தொல்லை இருக்காது. அறிவு துலங்கும்.

3. `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் உப்புக் கூடி… அதனால்தான் மலச்சிக்கலோ?…’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், ‘Two minutes’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.

4. பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத ‘அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டுக்கும் ஏராளமான பிரச்னைகள் தரும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.

5. பாடசாலை முடிந்து வந்ததும், புத்தகப்பையோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைகளுக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.

6. பல நாட்கள் தொடரும் மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் காரணமான உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல்லாயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.

7. இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இரண்டு கிண்ணம் இளஞ்சூடான நீர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு கிண்ணம் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

8. குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

9. கடுக்காய்க்பிஞ்சை லேசாக ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் ஆமணக்கெண்ணை/விளக்கெண்ணையையில் (Castor Oil) வறுத்து, அரைத்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம்கழிப்பது எளிதாகும்.

10. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (Terminalia Bellirica) ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து. இந்தப் பொடியை மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால், காலையில் மலம்கழித்தலை எளிதாக்கும். பல ஆரோக்கியங்களை உடலுக்குத் தரும். இதை `திரிபலா தூள்’ என்றும் சொல்வார்கள்.

மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்…
கவனத்திற் கொள்க!

பதிவு: மோகன்
நன்றி: பாலு சத்யா (விகடன்)

COMMENTS