கொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன?

கொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன?

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதென அநுராதபுரம் மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவிக்கின்றார்.

சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதிகள் இருப்பதாக தெரிவித்து, சிறைச்சாலைக்குள் கைதிகள் நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் முயற்சித்த வேளையில், கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சில கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் ஒருவர் முதலில் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம், கேகாலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.

சிங்கள ஊடகங்கள் மற்றும் ஏனைய தரப்பு தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தான் இந்த தகவலை வெளியிட்டிருந்ததாக பிபிசி தமிழுக்கு அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் போதிய வசதிகள் இல்லாத பின்னணியில், அளவுக்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் நோய் பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனின் இந்த கருத்துக்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

நாட்டிற்குள் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இதுவரை யாரும் வைரஸ் தாக்கியமை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கில் வாதிடும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளுக்கு குறித்த தமிழ் அரசியல் கைதிகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

சிறைச்சாலை ஆணையாளருக்கு இந்த விடயம் தொடர்பில் தாம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், பெரும்பாலும் நாளை அதற்கான தீர்மானம் கிடைக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் மாத்திரம் மூன்று பெண் தமிழ் அரசியல் கைதிகள் அடங்கலாக 20 தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறைச்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக தமிழ் அரசியல் கைதிகளுக்கு எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொவிட் – 19 இலங்கையின் நிலைமை

கொவிட் – 19 வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அங்கொடை ஐ.டி.எச் மருத்துமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

அத்துடன், கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 222 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்குச் சட்டம் தொடர்கின்றது

இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற பின்னணியில் அதனை தடுக்கும் வகையில் அரசாங்கம் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் முடங்கியுள்ளதை காண முடிகின்றது.

அத்தயாவசிய சேவைகளை மேற்கொள்வோர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே வெளியில் செல்ல அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஊரடங்கு சட்ட உத்தரவை மீறிய சுமார் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று காலை 9 மணி வரையான காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மைதானங்களில் ஒன்று சேர்ந்து மதுபானங்களை அருந்தியவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள், உணவகங்களை திறந்திருந்தவர்கள், மதுபோதையில் வீதிகளில் நடமாடியவர்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

COMMENTS