கொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை.

கொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் அனைவரும் நாட்டிலுள்ள 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, நாடு முழுவதும் சுகாதார பரிசோதகர்களால் 4,405 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

அவர்களில் 2769 பேர் இலங்கையர்கள் எனவும், 1120 பேர் சீன நாட்டு பிரஜைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1700 பேர் வரை தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இவர்களில் 8 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணிதாய்மாருக்கான பரிசோதனைகள் இடைநிறுத்தம்?

கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.

குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிசுக்களுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அது எந்தவிதத்திலும் சிசுகளுக்கு பிரச்சினையாக அமையாது எனக் கூறிய அவர், இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த ஊசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

குறித்த இடங்களுக்கு அதிக அளவிலான மக்கள் ஒன்று திரளுவதை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வருகைத்தந்து, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாதவர்களை, பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

இலங்கையில் மதவழிபாடுகளுக்கு கட்டுப்பாடு

இலங்கையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட அனைத்து விதமான ஒன்று கூடல்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாகவே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையானது மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறுகிறது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்நாட்டு யாத்திரைகள் மற்றும் சுற்றுலா பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

COMMENTS