கொரோனா வைரஸ்: அடுத்து என்ன? – சீன மருத்துவர்களின் உதவியை நாடும் மலேசியா

கொரோனா வைரஸ்: அடுத்து என்ன? – சீன மருத்துவர்களின் உதவியை நாடும் மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று 71 வயது முதியவர் ஒருவர் கொவிட் 19 நோயால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் மலேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் 24 ஆம் தேதி மதியம் வரை மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 1,624 என சுகாதார அமைச்சு அறிவித்தது. இன்று மட்டும் புதிதாக 106 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

மொத்தம் 64 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்களுக்கு மத்தியில் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

இன்று உயிரிழந்த முதியவர் மலாக்கா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட இரு நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

வுஹான் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் மலேசிய மருத்துவர்கள்

மலேசியா முழுவதும் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஓர் அங்கமாக, கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின், வுஹான் பகுதி மருத்துவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் (காணொளி வசதி) மூலம் மலேசிய மருத்துவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க சீனாவில் எடுக்கப்பட்ட மருத்துவ ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து மலேசிய மருத்துவர்கள் கேட்டறிகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 26 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது சீன மருத்துவர்கள் செயல்பட்ட விதம் குறித்து உரிய விவரங்களைக் கேட்டறிவார்கள் என்றும், மிக விரைவில் சில மருத்துவர்கள் சீனாவுக்கு அனுப்பப்படுபவர் என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், அடுத்த கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் தருவிக்கப்படும் என்றார்.

ஒத்துழைக்க மறுத்த 28 பேர் கைது: மலேசிய காவல்துறை நடவடிக்கை

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய வகையில் 28 பேரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர்.

இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, இது தொடர்பாக 46 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அவை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“பொது மக்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. காவல்துறை வீட்டுக்குச் செல்லுமாறு முதலில் அறிவுறுத்துவார்கள். அதன்பிறகும் ஒத்துழைப்பு தராதவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பாக பொது மக்களை முன்பே எச்சரித்துள்ளோம்,” என்றார் இஸ்மாயில் சப்ரி.

இதற்கிடையே, கொரோனா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை தெரிவித்துள்ளது.

85 வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், 6 நபர்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

“போலியான, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது சிலரது பழக்கமாக உள்ளது. அவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எச்சரிக்கிறேன்,” என்றார் இஸ்மாயில் சப்ரி.

(Visited 6 times, 1 visits today)

COMMENTS