கேட்டதும் கொடுப்பவனே……

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கேட்டேன்
கடவுள் தாய் தந்தார்
உலகம் காட்டும் தோள்கள் கேட்டேன்
கடவுள் தந்தை தந்தார்
என் வலி உணரரும் நெஞ்சம் கேட்டேன்
கடவுள் சகோதரர் தந்தார்
எண்ணில் அடங்கா கைகள் கேட்டேன்
கடவுள் நண்பர்கள் தந்தார்
புத்தி துலக்கும் வழி கேட்டேன்
கடவுள் ஆசான் தந்தார்
பெருநிதி பெருக்கும் வழி கேட்டேன்
கடவுள் நன்நூல்கள் தந்தார்
சிறகுகள் இல்லாமல் பறக்கக் கேட்டேன்
கடவுள் கற்பனை தந்தார்
மண்ணில் நிலைத்த சொர்க்கம் கேட்டேன்
கடவுள் நன்மனைவி தந்தார்
விருட்சங்கள் வேண்டி விதைகள் கேட்டேன்
கடவுள் பிள்ளைகள் தந்தார்
கள்ளம் இல்லா உள்ளம் கேட்டேன்
கடவுள் குழந்தைமனம் தந்தார்
கண்கள் திறக்காமல் காட்சிகள் கேட்டேன்
கடவுள் கனவுகள் தந்தார்
நெருப்பு இல்லாமல் புகையைக் கேட்டேன்
கடவுள் பொறாமை தந்தார்
என்னை அழிக்க ஆயுதம் கேட்டேன்
கடவுள் கோபம் தந்தார்
எண்ணம் செழிக்க வழி கேட்டேன்
கடவுள் தனிமை தந்தார்
காரிருளில் பார்வை கேட்டேன்
கடவுள் ஞானம் தந்தார்
கனவுகள் இல்லாத தூக்கம் கேட்டேன்
கடவுள் மரணம் தந்தார்
மோகன்
2012-04-07

COMMENTS