காதறுந்த செருப்பு

காதறுந்த செருப்பு

“அண்ணை இந்த வெள்ளையன்ர கள்ளுக்கொட்டிலுக்கு எதால போறது?”. ஏதோ யோசனையில போன பொன்னம்மான் மொள்ளத் திரும்பிப் பார்த்தார். சைக்கிள்ளை ஸ்ரைலா ஒரு இளந்தாரிப்பொடியன்.                      “அண்ணை உங்களுக்குக் கட்டாயம் தெரிஞ்சிருக்கும், சொல்லுங்கோ…”
“தம்பி உந்த ஒழுங்கையாலை போய் சோத்துக்கைப் பக்கம் திரும்பினால் ஐயற்ற கிணத்தடி வரும். அதுக்குப் பக்கத்திலே மூண்டாவது படலைதான் கள்ளுக்கொட்டில். வளவுமுகப்பிலே பெரிய வேப்பமரம் ஒண்டு நிக்கும். நீர் மிஸ் பண்ண மாட்டீர்… நேர போம் தம்பி”. பொன்னம்மான் சொன்னதைக் கேட்டதும், “அட அதாலைதானே இப்ப நான் வந்தனான். அந்த வேப்பமரத்திலே ஒரு காதறுந்த பழஞ்செருப்புக் கூடத் தொங்குமே.. அந்த வளவோ?…சரி …சரி…”, எண்டு பொடியன் சொன்னதும் சடாரென்று பொன்னம்மனிண்ட முகம் போன போக்கைப் பாக்கவேணுமே. ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டார். விளக்கத்துக்கு நன்றி சொல்லிப்போட்டு பொடியன் சைக்கிளை வீச்சா உளக்கிக்கொண்டு போய்ட்டான்.

“யார் பெத்ததோ? சோக்கா உடுப்பை மாட்டிக்கொண்டு காலங்காத்தாலையே கள்ளடடிக்க வெளிக்கிட்டிது…கழிசடை…கழிசடை..” பொன்னம்மான், காதிலே இருந்த பாதிச் சுருட்டை எடுத்து, அதை நிகத்தால கிள்ளி, மொள்ளப் பத்த வைச்சுக்கொண்டு தனக்குள் புலம்பினபடி நடந்தார். ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பரட்டைத்தலையன் ஒருவன் கள்ளடிச்சிட்டு தள்ளாடி வாற மாதிரி, மாட்டுவண்டி ஒண்டு மலை போல பூவரசம்குழை ஏத்திக்கொண்டு ஆடியசைந்து, கிட்டத்தட்ட ஒழுங்கை முழுசையும் அடைச்சபடி வந்துகொண்டிருந்தது. சின்ன ஒழுங்கை விலத்திக்கொள்ள வழியில்லை. வண்டில்காரனுக்கு என்ன தலை போற அவசரமோ, “அண்ணை விலத்தண்ணை…” எண்டபடி அவருக்கு நல்லாக் கிட்ட வந்திட்டான். அஞ்சடி தூரத்திலே சரசக்கா வீடு…படலை திறந்துதான் கிடக்கு ஆனா அந்தக் கடிநாய் நிக்குமே..சரி அதைச் சமாளிச்சாலும் சரசக்காவை யார் சமாளிக்கிறது? மனுசி ஒரு பேணி தேத்தண்ணி தராது, ஆனா ஊர்ப்புதினமெல்லாம் ஒண்டுவிடாமக் கேக்கும். மாட்டுவண்டி வேற நல்லா கிட்ட வந்திட்டுது. “நல்லா மூச்சைப்பிடிச்சுக்கொண்டு தொப்பையை உள்ளுக்க இழு! பனையோலை வேலியோடை ஐக்கியமாகு!”. பொன்னம்மான் தனக்குத்தானே ஐடியா குடுத்துக்கொண்டு, கருக்குமட்டை தந்த உபாதையையும் பொறுத்துக்கொண்டு வேலியோடை ஐக்கியமானார். மாட்டுவண்டி அவற்றை மூக்கை உரசிக்கொண்டு ஒரு மாதிரிக் கடந்து போச்சு. பொன்னம்மான் உள்ளுக்க இழுத்த மூச்சை நிம்மதியா மொள்ள வெளிய விட்டார்.

பொன்னம்மான்ர மனிசி தெய்வானையக்கா செத்துக் கிட்டத்தட்ட இப்ப பத்து வருசமிருக்கும். நல்ல சீவன். ஊருக்குள்ள எல்லாருக்கும் நல்ல உதவி ஒத்தாசை. அரசடிஅம்மன்கோயில் திருவிழா எண்டால் மனுசிதான் எல்லாம். பம்பரம் மாதிரி சுழண்டு சுழண்டு வேலை செய்யும். மனுசி இல்லாட்டி அம்மன்கோயில்ல கொடி ஏறாது, ஏறின கொடி இறங்காது. மனிசின்ர நல்ல குணத்தாலே பொன்னம்மானுக்கும் ஊர்ச்சனத்திட்ட கொஞ்சம் ஸ்பெஷல் மரியாதை. மூண்டு மகன்மார்தான். எல்லாரும் வெளிநாட்டிலே இருக்கினம். தாயின்ற செத்தவீட்டுக்கு வந்ததுகள் பிறகு நாட்டுப்பக்கம், வீட்டுப்பக்கம் தலையே காட்டேல்லை. இடைக்கிடை காசு மட்டும் வரும்.

மொள்ள நடந்து பொன்னம்மானும் கள்ளுக்கொட்டிலுக்கு கிட்ட வந்திட்டார். படலைக்கு மேலாலே கொஞ்சம் எட்டிப்பார்த்தார். வழிகேட்ட இளந்தாரிப்பொடியனைக் காணேல்லை. யாரோ ரெண்டு பேரோடை வெள்ளையன் ஏதோ கதைச்சுக் கொண்டிருந்தான். காத்து சுகமாய் அடிச்சுக்கொண்டிருந்தது. தலை நிமிர்ந்து பார்த்தார். வேப்பமரஇலையள் காத்திலே சரசரத்துக்கொண்டு ஆட, அதோடை அந்தக் காதறுந்த பழஞ்செருப்பும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்திது. நல்லாத்தான் கொழிவிக்கிடக்கிது இந்தக் கோதாரிச் செருப்பு. அடிக்கிற காத்துக்கும், பெய்யிற மழைக்கும் அசைஞ்சு குடுக்குதா பார்! மூண்டு நாலுவருசமாத் தொங்குது. வழியாலே போற வாற பொடியள் கூடக் கல்லாலே எறிஞ்சு பாத்திட்டு, வெள்ளையனிட்ட பேச்சு வாங்கிக்கொண்டு விழுந்தடிச்சு ஓடுறதுதான் மிச்சம்.

பொன்னம்மானின்ர மனசில சடாரென்று ஒரு ‘பிளாஷ்பக்’ மின்னலடிச்சுது … அண்டைக்கு ஒரு பௌர்ணமி இரவு. பால் போல நிலாவெளிச்சம். வெள்ளையன்ர கொட்டில்ல கள்ளடிச்ச சனமெல்லாம் ஒண்டுக்கு பின்னாலே ஒண்டா கழண்டிட்டினம். பொன்னம்மான்தான் தென்னங்குத்தியில இருந்த கடைசிக் கஸ்ரமர். நெத்தலிக்கருவாட்டுப்பொரியலுக்கு ஓடர் குடுத்திட்டு பிளாவிலே வாயை வைச்சு ஒரு உறுஞ்சு உறுஞ்சினார். உற்சாகம் உச்சந்தலைக்கு ஏறவும் வெள்ளையன்ர மனுசி கருவாட்டுப்பொரியலோடை வரவும் சரியாயிருந்தது. அப்பிடியே ரி.ஆர். ராஜகுமாரியே கருவாட்டுத்தட்டோடை வந்துநிண்ட மாதிரி இருந்தது பொன்னம்மானுக்கு. கிறங்கடிக்கிற அந்தக் கண்ணும், ஆளை மயக்கிற அந்த மர்மப்புன்னகையும்….. ஒரு சனமும் கிட்ட இல்லை.

அதுக்குப்பிறகு என்ன நடந்ததோ சாமிக்குத்தான் வெளிச்சம். ‘நொய்ங்..நொய்ங்..’ என்ற சத்தத்தோடை ஆயிரம் நச்சத்திரங்கள் தலயில வந்திறங்கினதும், ‘சொய்ங்’ எண்டு ‘ஷெல்’ மாதிரி ஒண்டு அவற்ற வலதுகாதுப் பக்கமாய் பறந்ததும், பிறகு ஒற்றைச் செருப்பைக் கையில தூக்கிக்கொண்டு வெறுங்காலோடை வீட்டுக்கு வந்ததும், கயித்துக்கட்டில்ல குப்புறப்படுத்ததும்தான் தெரியும் பொன்னம்மனுக்கு!

மோகன்
2010-09-07

COMMENTS