கடினமான சூழலில் எங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி! – இத்தாலியில் மாணவர்களை மீட்ட அதிகாரிகள்

கடினமான சூழலில் எங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி! – இத்தாலியில் மாணவர்களை மீட்ட அதிகாரிகள்

கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த வைரஸால் இத்தாலியில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நகரங்கள் அங்கு பூட்டப்பட்டதை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலரும் இத்தாலியில் தவித்து வந்தனர். இந்தியாவிலும் கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்களால் இங்கு வர முடியவில்லை.

இந்த நிலையில், இத்தாலியில் சிக்கியிருந்த 211 மாணவர்கள் உட்பட 218 பேரை மத்திய அரசு ஏற் இந்தியா விமானம் மூலம் மீட்டு வந்துள்ளது. அவர்களை அதிகாரிகள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். “இந்த கடினமான சூழலில் எங்களுக்கு உதவிய ஏர் இந்தியா விமானம் மற்றும் இத்தாலிய அதிகாரிக்கு நன்றி. இத்தாலியில் உள்ள அனைத்து இந்தியர்களின் நலனையும் நாங்கள் உறுதி செய்வோம்” என இத்தாலியில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் ட்வீட் செய்துள்ளனர்.

இதனையடுத்து இரானில் உள்ள 234 இந்தியர்களையும் ஏர் இந்தியா விமானம் மூலம் அதிகாரிகள் மீட்டு வந்துள்லளனர். அவர்களையும் ராஜஸ்தானில் உள்ள இராணுவ மையங்களில் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் அதிகாரிகள் வைத்துள்ளனர். இவர்களில் 131 பேர் மாணவர்கள் ஆவர். அனைவரும் இந்தியா வந்ததை அடுத்து, இரான் அதிகாரிகளுக்கும் இரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தனது நன்றியை தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார்.

வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை மத்திய அரசு கடந்த சில வாரங்களில் மீட்டு வந்துள்ளது. அவர்களும் தனிமைபடுத்தப்பட்டு கொரோனா குறித்த பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்து வருகிறது.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS