கச்சான் அல்வாவும் வெத்திலையும்.

எனக்கு என்ன பன்ரெண்டுஅல்லது பதின்மூன்று வயதிருக்குமா? இருக்கலாம். பள்ளிக்கூட விடுமுறையைக் களிக்க நான் வழமைபோல் அளவெட்டிக்கு போயிருந்தேன். தாத்தாவுக்கு அப்போது உடல்நலம் மோசமாக இருந்த நேரம். தன் ஒரே மகனான எங்கள் மாமாவை இழந்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் தானே உழைத்து உழைத்து தாத்தா மிகவும்களைத்துப் போயிருந்தார்.அன்றைக்கு சித்திரை வெயில் கொளுத்தும் மத்தியான நேரம். மதிய உணவாக ஆச்சி தந்த “பார்லி” கஞ்சியைச் சாப்பிட்டுவிட்டு, கடைக்குப் பின்னால் இருந்த சாய்வுநாற்காலியில் தாத்தா ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் ஒன்று விட்ட சின்னக்கா அங்கே வந்தா. “அட இவ ஏன் இப்ப இங்க வந்தா?” என்று சலிப்போடு நினைத்துக்கொண்டு என்னுடைய சோர்ட்ஸ் பொக்கற்ல இருந்த கச்சான் அல்வா பக்கற்றை மெல்லத் தடவிப் பார்த்தேன். வந்தவ தாத்தாவுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன நாற்காலியில் அமர்ந்தா. “என்ன மோகன் நீ யாழ்ப்பாணத்தை விட்டிட்டு தாத்தா, ஆச்சியோடை வந்திருக்கலாமே? இஞ்சை மகாஜனா கொலிச்சில சின்னத்தம்பி உன்னைச் சேர்த்துவிடுவார். வாறியோ?”. நான் பதில் சொல்ல முதல் தாத்தா என்னை முந்திக்கொண்டு பதில் சொன்னார். “நானும் கேட்டுப் பாத்திட்டேன். இவன் ரெண்டு சதத்திற்கு வாங்கிற செல்லையா கடைப் பொரிகடலையை விட்டிட்டு இங்க வரமாட்டான் போல!”. இப்பவும் நான் பதில் சொல்ல முதல் சின்னக்காவே பதில் சொன்னா. “தாத்தா..மோகனுக்கு ஒரு புதுச்சைக்கில் வாங்கிக் குடுங்கோ அவன் வருவான்”. “இவன் வாரெண்டு சொல்லட்டும், உடனே ஒரு புதுச் சைக்கில் வாசலில நிக்கும்.” என்றார் தாத்தா.

அப்போதைக்கு என்னுடைய பிரச்சினை சத்தியமா புதுச் சைக்கிலோ, மகாஜனா கொலிச்சோ இல்லை. தாத்தா கடையில இப்ப கொஞ்சம் முதல் “சுட்ட” கச்சான் அல்வாவை யாருக்கும் தெரியாமல் எப்படி நிம்மதியாய் சாப்பிடலாம் என்ற ஒரு எண்ணம்தான்! எப்ப தாத்தா நித்திரை கொள்வார்? எப்ப சின்னக்கா போய்ச் சேருவா? ஆச்சி என்னை கடையைப் பாக்கச் சொல்லிவிட்டு வளவுக்கிணத்தில குளிக்கப் போயிட்டா. தாத்தாவும் மொள்ள நித்திரையாப் போட்டார். சின்னக்காதான் இப்ப எனக்கும் கச்சான் அல்வா பக்கற்றிக்கும் இடையில பிரச்சனையா நிண்டா. என்னுடைய யோசனையெல்லாம் இவவை அப்புறப்படுத்திறதுதான். எப்படி?

வழி தெரியேல்லை! கச்சான் அல்வா பக்கற்றை திரும்பவும் ரகசியமாய் மெல்லத் தடவிப்பார்த்தேன். விரல்களுக்கு இதமாய்இருந்தது. தாத்தாவும் நித்திரை, ஆச்சியும் இல்லை எண்டதும் சின்னக்கா மெல்ல என்னைப் பார்த்தா. திரும்பி பக்கத்தில கட்டுக் கட்டா அழகா அடுக்கி வைச்சிருந்த வெத்திலையைப் பார்த்தா. சுவையான மாவிட்டபுர வெத்திலைகள்  பச்சைப் பசேல் என்று  சிரித்துக் கொண்டிருந்தன. வெத்திலை எண்டா அவவுக்கு உயிர்.     உடனே என் பிரச்னைக்கு தீர்வு வந்தது போல உணர்ந்தேன். ஒரு கட்டு வெத்திலை, ஒரு பிடி சீவல் எடுத்து சின்னக்கா கையில் கொடுத்தேன். அவ சந்தோசமாய் அவற்றை வாங்கினா. போக வெளிக்கிட்டவ திரும்பி என்னைப் பார்த்து “மோகன்..காசை மறக்காம எங்கடை வீட்டுக்கணக்குக் கொப்பியில எழுது. பாவம் தாத்தா இந்த வயசிலையும் கஷ்டப்பட்டு உழைக்கிறவர். அவரை ஏமாத்தக் கூடாது”.எனக்கு சுரீர் எண்டது. முகத்தில யாரோ ஓங்கி அறைஞ்சது மாதிரி இருந்தது. சின்னக்கா போய் விட்டா. சோர்ட்ஸ் பொக்கற்ல இதுவரைக்கும் துருத்திக் கொண்டிருந்த இருந்த கச்சான் அல்வா பக்கற்றை எடுத்தேன். போத்திலைத் திறந்தேன். உள்ளே திரும்பப் போடப் போனபோது எதிர்பாராமல் ராசக்குஞ்சாச்சி கடைக்குள் வந்தா……………

பின்குறிப்பு: இந்த உண்மைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தாத்தா, ஆச்சி, ராசக்குஞ்சாச்சி யாரும் இப்போது உயிரோடில்லை! எங்கள் எல்லோரின் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய சின்னக்காவும் சில நாட்களுக்கு முன்தான் 
எங்களை விட்டு மறைந்தா! 

மோகன்

2011-04-06

(Visited 15 times, 1 visits today)

COMMENTS