எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 1

‘எங்கள் குடும்பம் பெருசு’ என்ற இந்த தொடரில் என் வாழ்விலும், என்னைச் சுற்றியிருந்த, சுற்றியிருக்கும் உறவுகளின், நண்பர்களின் மற்றும் அயலவர்களின் வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்கிறேன்.

எல்லோருடைய வாழ்விலும் எத்தனையோ சுவையான, மகிழ்ச்சியான, எதிர்பாராத, அதிர்ச்சியான, சோகமான, சம்பவங்கள் நாளாந்தம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து சுவாரசியமாகச் சொன்னால் எத்தனை எத்தனை ஒருபக்கக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், பெருந்தொடர்கள்…

பிரபல்யமானவர்களின் வாழ்வில் மட்டுமே சுவையான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும் என்றோ அல்லது சொந்த நினைவுகளை எழுத பிரபல்யமானவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியோ  இல்லை என்பது என் வாதம்!

– மோகன் 

அத்தியாயம் 1

‘காங்கேசன்துறைவீதி வதிவிடங்கள்’ 

காங்கேசன்துறை வீதி, இலக்கம் 367. இதுதான் நான் குழந்தைப்பருவம், விடலைப்பருவம் முழுவதும் வாழ்ந்த வீடு. எத்தனையோ இனிமையான நினைவுகள். நினைத்தாலே நெஞ்சமெல்லாம் மணக்கும். நாங்கள் இந்த வீட்டுக்கு முன் வீட்டில்தான் முதலில் குடியிருந்தோம். அந்த முன் வீட்டில் இரண்டு குடும்பங்கள். ஜவகர் குடும்பமும், நாங்களும் சேர்ந்து வாழும் ஒட்டுக்குடித்தனம். வலது பக்கம் ஜெயமண்ணைவீடும், இடதுபக்கம் கந்தவேலண்ணை வீடும் அதைத் தொடர்ந்து ஒரு பத்து அல்லது பதினைந்து குடும்பங்கள் வாழ்ந்த, நீண்டதும் பெரியதுமான சிறாப்பர் காணி, பின்பக்கம் செல்வாவின் சொந்தக்காரர்களான அத்தையம்மாவின் புளியடிக்காணி. அத்தையம்மா தன் மகள் குடும்பத்தோடு கொழும்பில் வசித்தாலும் பள்ளிக்கூட விடுதலை விட்டதும் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து இங்கே தங்குவது வழக்கம்.

புளியடிக்காணியில் பெயருக்கேற்ப மிகப்பெரிய ஒரு புளியமரமும், அன்னமுன்னா, இலந்தை, மா, பலா, வாழை, விளாத்தி என ஒரு தொகை பழமரங்களும் இருக்கும். இந்த புளியடிக்காணி எங்கள் சிறுவயதுப் பருவத்தில் மிக முக்கியமான ஒரு விளையாட்டுக்களம். ஆயிரமாயிரம் ஆனந்த நிகழ்வுகளுக்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய சோக நிகழ்வுகளுக்கும் களமாய் அமைந்த புளியடிக்காணியைப் பற்றி பின்னால் விபரமாய் சொல்வேன்.

எங்கள் வீடு மண்சுவராலானாலும், பெரிய அறைகள் கொண்ட ஓட்டுக்கூரை வீடு. ஒரே கிணத்தை ஜெயமண்ணை வீட்டுக்காரரும் நாங்களும் பங்குபோட்டுக்கொள்வோம். சரி பாதியா கிணத்தைப் பிரித்து, தகரத்தால் தடுப்பு ஒன்று போட்டிருக்கும். முகம் பார்காமலே அம்மாவும் ஜெயமண்ணையின் அம்மாவும் கதைத்துக் கொள்வது கேட்க சுவாரசியமாய் இருக்கும். நாங்கள் எங்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தாலும், காதுகள் மட்டும் அம்மாக்கள் கதைத்துக் கொள்ளும் விசயத்தை கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும். தப்பித்தவறி எங்களைப்பற்றி ஏதாவது தகவல் பரிமாற்றம் வந்தால் உடனே அதைப் பதிவு செய்து கொள்வோம். உதாரணத்திற்கு எனக்கோ, என் தம்பி சந்திரவிற்கோ நாளைக்கு தலைமயிர் வெட்டு, வயிற்ராலே போக பேதிமருந்து அல்லது தடுப்பூசிமருந்து என்று கதை வந்தால் உஷாராகிவிடுவோம்! என்ன, அடுத்த நாள் எங்களைத் தேடி கொஞ்சம் அலைய வேண்டிருக்கும், அவ்வளவுதான்!இந்த வீட்டில்தான் எனக்கும் என் தம்பி சந்திராவிற்கும் ஒரு நல்ல நண்பன் கிடைத்தான். பெயர் ஜவகர்லால் நேரு! இந்த நேருவிற்கு பிறகுதான் இந்திராகாந்தியின் தந்தை நேருவைப்பற்றியே எனக்குத் தெரியவந்தது. அந்தவீட்டில் எல்லா சிறுவர்களும் சேர்ந்து குளிப்பதே ஒரு சுகானுபவம்! எங்கள் ஐயாவும், ஜவகரின் அப்பாவும் துலாவால் தண்ணி அள்ளி அள்ளி எங்கள் மேலே ஊற்ற, நாங்களும் பிறந்த மேனி சகிதம் ஆனந்தமாய்க் குளிப்போம். உச்சிவெயில் மண்டையை பிளக்க கணுக்காலளவு தண்ணியிலே நீச்சலடிச்சு மணிக்கணக்காக் கிடப்போம். ஐயாவும், ஜவகரின் அப்பாவும் சளைக்காமல் தண்ணி அள்ளி ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். அடுப்படியிலே இருந்து அம்மாவின் குரல் கேட்கும்.
“போதும் போதும் அவங்களை அனுப்புங்கோ, எவ்வளவு நேரம்தான் குளிக்கிறது?…”.
“இன்னும் கொஞ்சம்…இன்னும் கொஞ்சம்”
என்று நாங்கள் கெஞ்ச, ஐயாவும் எங்களை மேலும் சற்று நேரம் குளிக்க விட்டு,
“இதோடை காணும்..ஓடிப்போங்க ..”
என்று அனுப்பி வைக்க, அம்மா அப்படியே துவாயாலே சுற்றி அரவணைத்துத் தூக்கும் சுகமே அலாதி!
 
ஒரு நாள் ஆழ்ந்த நித்திரையிலிருந்தபோது, காதைப் பிளக்கும் பேரொலியோடு ஏதோ இடிந்து விழுந்தது போல இருந்தது. எல்லோரும் அதிர்ச்சியோடு எழுந்தோம். நடுச்சாமம் கடந்த நேரமிருக்கும். மழை பெரிதாக பெய்துகொண்டிருந்தது. இடையிடே மின்னலும் அதைத் தொடர்ந்து இடியோசையும் என் கலக்கத்தை மேன்மேலும் அதிகரித்தது! “அய்யோ…அய்யோ…” என்ற அவலக்குரலும் அதைத் தொடர்ந்து அழுகுரலும் கேட்டது. ஐயா, ஒளியைத் தணித்து வைத்திருந்த சிமினிவிளக்கின் திரியை உயர்த்தி, விளக்கை கையில் எடுத்துக்கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார். நாங்களும் பின்னால் ஓடினோம். எங்கள் வீட்டு இடது பக்கச்சுவரின் பெரும் பகுதியொன்று கந்தவேலண்ணையின் குடிசைவீட்டின் மேல் விழுந்திருந்தது. இடிபாடுகளுக்கு கீழே கந்தவேலண்ணையின் அப்பா சிவகுரு மாமா!

தொடரும்…

மோகன் (2010-07-09)

COMMENTS