எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 6

எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 6

அத்தியாயம் 6

திரைப்படங்களின் தாக்கம்!

வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேண்டும். பிடிப்புகள், எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் வாழ்க்கை சுவையாக இருக்காது. வாழ்வில் பிடிப்புகளை ஏற்படுத்துவதில் சொந்தங்களும் பந்தங்களும் தரும் உறவுகள்தான் முதன்மையானவை. அதோடு நண்பர்கள், கல்வி, தொழில், கலைகள், விளையாட்டு, புத்தகங்கள் என்று அந்தப் பட்டியல் அவரவர் விருப்பின்படி நீண்டு கொண்டே போகும். இந்தவரிசையில் திரைப்படக்கலை எனக்கு மிகவும் பிடித்தவொன்று. எங்கள் குடும்பத்தில் ஐயா உட்பட நாங்கள் எல்லோரும் நல்ல திரைப்படங்களைப் பற்றி ஒன்றாகவிருந்து கதைப்பதுண்டு. வேறு சில குடும்பங்களைப் போல திரைப்படங்களை தீண்டத்தகாத ஒன்றாகவோ, பார்க்கவோ அல்லது பேசக்கூடாத ஒன்றாகவோ சொல்லி நாங்கள் வளர்க்கப்படவில்லை. அதில் எனக்கு பெருமை கலந்த மகிழ்ச்சி உண்டு. பல ரம்யமான மாலைப்பொழுதுகளில், ஐயா, அம்மா உட்பட அனைவரும் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் பற்றியும், குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள்,
தினமணிக்கதிர், கல்கி, கல்கண்டு போன்ற வாரப்பத்திரிகைகளில் வரும் கதைகள், கட்டுரைகள் பற்றியும் மணிக்கணக்காக அலசுவோம்.

ஐயாவிற்கும், சின்னண்ணாவிற்கும், எனக்கும் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் பிடிக்கும். அக்காவிற்கு ஜெமினிகணேசன், சந்திராவிற்கு எம்.ஜி.ஆர் ஆனால் பெரியண்ணாவோ எப்போதும் எதிலும் ஒரு தனி ரகம். எம்.ஆர்.ராதா அவரின் அபிமான நடிகர்! பத்திரிகையென்றால் கல்கண்டு. எழுத்தாளர் என்றால் தமிழ்வாணன். ‘ரத்தக்கண்ணீர்’ வசனங்களை ஒரே மூச்சில் மூன்று விதமான குரல்களில் எம்.ஆர்.ராதாவைப் போலவே பேசி அசத்துவார். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவார். ஏறத்தாள பதினைந்துவயதிலேயே நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்று நண்பர்களுடன் சேர்ந்து ‘வசந்தம்’ என்றொரு மாதவிதழை அச்சுப்பிரதியாக வெளியீடு செய்ததும், கதை, வசனம், இயக்கம், வில்லன் பாத்திரம், காட்சியமைப்பு என்று ஏறத்தாள எல்லாப் பொறுப்புகளையும் தானே ஏற்று ‘நல்லவன் வாழ்வான்’ என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்ததும் மறக்க முடியாதவை. இந்த நிகழ்வுகளை பின்னர் விரிவாக எழுதுவேன்.

திரையுலகம் என்பது ஒரு கனவுப்பூமி. நல்ல திரைப்படங்கள் என்பது அந்த கனவுப்பூமியில் கற்பனைகளும், கனவுகளும் கலந்ததால் விளைந்த அற்புதமான படைப்புகள். அந்த அற்புதமான படைப்புகளிலே மின்னும் தாரகைகள்தான் எம்மைக் கவர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள். இவர்கள்தான் கதாசிரியரின் கற்பனைப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எங்கள் முன் அவர்களை நடமாட வைப்பவர்கள். இந்த படைப்புகளை அணுஅணுவாக செதுக்கி ஒரு நல்ல சிற்பம்போல உருவாக்கித் தரும் சிற்பிகள் இயக்குனர்கள். இந்த படைப்புகளின் ஒட்டு மொத்த சொந்தக்கார்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள். சம்பந்தப்பட்ட கலைஞர்கள், தொழில்நுட்பர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் முழுச் செலவுகளையும் ஏனைய தயாரிப்பு செலவுகளையும் இவர்களே தாங்கிக்கொள்கிறார்கள். திரைப்படத் தயாரிப்பு என்பது ஒன்றும் சாமானிய வேலையில்லை. எத்தனையோ பேருடைய கடும் உழைப்பால் உருவாவது இது. வியாபாரரீதியில் எந்த திரைப்படம் விண்ணைத்தொடும், எந்தத் திரைப்படம் மண்ணைக் கவ்வும் என்று யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாது.

திரைப்படங்கள் அறிமுகமாகி ஏறத்தாள 100 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பார்த்த முதல் திரைப்படம் எதுவென்று எனக்கு நினைவில்லை ஆனால் நினைவு தெரிந்து பார்த்த படம் ‘சக்கரவர்தித் திருமகள்’ என்றுதான் நினைக்கிறேன். 1957 இல் வெளியான இந்த திரைப்படம் எம்.ஜி.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு மற்றும் பலர் நடித்த, ஏ.எல்.எஸ் நிறுவனத்தின் முதலாவது தயாரிப்பு. ப.நீலகண்டனின் இயக்கத்தில் உருவான ஒரு பெரும் வெற்றிப்படம். யாழ்பாணத்தில் ராணி படமாளிகையில், பார்த்ததாக நினவு. திரைப்படங்களில் சாகசக் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். அறிமுகமாகி மக்கள் மனதிலே இடம்பிடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் அது. பி.எஸ்.வீரப்பாவின் அனாயசச் சிரிப்பும், பார்ப்பவரை அதிரவைக்கும் அட்டகாசமான வில்லன் நடிப்பும் எங்கள் அயல் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒன்று.

எங்கள் வீட்டுக்கு அருகே வசித்த ஜெயமண்ணையின் அபிமான நடிகர் பி.எஸ்.வீரப்பா. ‘சக்கரவர்த்தித் திருமகள்’, ‘மகாதேவி’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘நாடோடி மன்னன்’ போன்ற பி.எஸ்.வீரப்பாவின் முத்திரை பதிந்த வெற்றித் திரைப்படங்களின் வசனங்களை அவர் அழகாகப் பேசிக்காட்டுவார். மகாதேவியில் “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!” என்ற கண்ணதாசனின் வசனம்தான் நான் முதன்முதல் கேட்ட தமிழ் ‘பன்ச்’ வசனம். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினி, வைஜந்திமாலா நடனப்போட்டியை விமர்சித்து “சபாஷ் சரியான போட்டி!”, நாடோடி மன்னனில் நம்பியாரை ஏமாற்றிவிட்டு “பாவம் பிங்கலன் ஒரு அப்பாவி!” போன்ற பிரபல்யமான வசனங்களை அவர் அடிக்கடி எடுத்து விடுவார். நாங்கள் மிகவும் ரசித்துக் கேட்போம்.

‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் இளவரசி கலாமாலினியாக வரும் அஞ்சலிதேவியின் திருமணப்போட்டியில் என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் பாட்டிலேயே கேள்வி கேட்டு பதில் சொல்லி அரசசபையில் மோதிக்கொள்வார்கள். இந்தப் போட்டியை தளபதியாக வரும் பி.எஸ்.வீரப்பா தன் தனித்துவமான குரலில், அற்புதமான பாணியில் தொடக்கி வைப்பார். “நகரப் பெருமக்களே! சக்கரவர்த்தித் திருமகள் கலாமாலினி அவர்களின் திருமணப்போட்டி இன்று ஆரம்பம். முதலாவதாக ஒரு கலைப்போட்டி. கவனியுங்கள்! போட்டியிலே கலந்து கொள்ள வந்திருக்கும் இளவரசரிடம் சரமாரியான பல கேள்விகள் கேட்கப்படும். இப்போது இந்த கேள்விகளைக் கேட்கப் போகிறவர் தேசமெல்லாம் திக் விஜயம் செய்து, பல்லாயிரம் பாவலர்களை பாட்டினால் வென்று, சென்றவிடமெல்லாம் ஜெயக்கொடி நாட்டி, பட்டையங்கள், பதக்கங்கள், பட்டாடைகள், விருதுகள் பலவும் வீர வாளும் பரிசு பெற்ற தாளவிதரத்ன, சங்கீதபூஷண, கலாவிற்பன்ன, வித்தகுலத்திலக, கோடையிடி அவதார நந்தி ‘டேப்பு’ சொக்கன் (என்.எஸ்.கிருஷ்ணன்). இன்று போட்டியிலே கலந்துகொள்ளப்போகிறவர் காவிரிப்பட்டணத்து இளவரசர் உதயசூரியன் (எம்.ஜி.ஆர்) அவர்கள். ‘டேப்பு’ சொக்கன் கேட்கும் கேள்விகளுக்கு பாட்டிலேயே பதில் சொல்ல வேண்டும். பதில்கள் பொருத்தமானதா என்று பஞ்சாயத்தார் முடிவு செய்வர்”.

“தானத்திலே சிறந்த தானம் எது?” என்று என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க. “நிதானம்” என்று எம்.ஜி.ஆர் பதில் சொல்வார். தொடந்து சரமாரியான பல கேள்விகள். “உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” என்ற கேள்விக்கு “நிலை கெட்டுப்போன நயவஞ்சகர்களின் நாக்கு” என்று பதில் சொல்லி போட்டியில் எம்.ஜி.ஆர் வெல்வார். தொடர்ந்து நடனப்போட்டி, கத்திச்சண்டைப் போட்டி என்று வரும்போது பி.எஸ்.வீரப்பாவின் சூட்சிகளையும் மீறி எம்.ஜி.ஆர் வெற்றிவாகை சூடுவார்.

அனேகமாக எப்போதாவது ஒரு சனிக்கிழமையிலோ அல்லது தைப்பொங்கல், தீபாவளி போன்ற விசேட பண்டிகை நாட்களிலோ அல்லது சிவராத்திரி, கார்த்திகைவிளக்கீடு போன்ற விசேட நாட்களிலோ படம் பார்க்க வீட்டில் அனுமதியும் காசும் கிடைக்கும். அன்றைக்கு ஏற்படும் சந்தோசம் சொல்லமுடியாது! அம்மா சொல்லும், மற்றும் சொல்லாத சில்லறை வீட்டுவேலைகளையெல்லாம் கூட மின்னல் வேகத்தில் செய்வேன். செல்லையாமில்லில் அரிசி அல்லது மிளகாய் அரைப்பதா? அரிசி தீட்டுவதா? விறகு பொறுக்கி அடுக்குவதா? அப்பத்திற்கு கள்ளு வாங்கி வருவதா? சங்கக்கடைக்குப் போய் பங்கீட்டுச் சாமான்கள் வாங்கி வருவதா? எல்லாம் கச்சிதமாய் செய்வேன். அன்று தீபாவளி அல்லது சனிக்கிழமையாக இருந்தால் யாரும் சொல்லாமலே உச்சி வெயிலில் கோவணத்தைக் கட்டிக்கொண்டு, எண்ணைமுழுக்கு ஒன்று போட்டுவிட்டு, அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த ஆட்டிறைச்சிக்குழம்பையும், இறைச்சிப்பொரியல் கறியையும், ரசத்தையும் ஒரு கை பார்த்துவிட்டு, ஒரு குட்டி நித்திரை போடுவேன். மாலை படக்காட்சியின் போது நித்திரை கொள்ளக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை இது!

எண்ணமெல்லாம் அன்று மாலை பார்க்கப்போகும் திரைப்படம் பற்றியதாகவே இருக்கும். இதற்கான தூண்டுதல் முன்வேலைகளை படமாளிகைக்காரர்கள் கச்சிதமாகச் செய்திருப்பார்கள். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் போன்ற பெரிய நடிகர்கள் படமானால் வானுயர்ந்த முழு உருவப்படங்கள் வைப்பார்கள். வீதி வீதியாக வாகனங்களில் வந்து விளம்பரங்கள் போடுவார்கள். அந்த விளம்பரங்களை அயல்வீட்டுச் சிறுவர்களுக்கு முன்னதாக விரைந்தோடிப் பொறிக்கிவருவது ஒரு சாகசம்! பத்திரிகைகளில் முழுப்பக்கத்தில் சிவாஜிகணேசனும், எம்.ஜி.ஆரும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். வசந்தா சலூனில் தலைமயிர் வெட்டப்போனால், பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்களை சுவரில் பார்க்கலாம். வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிதாக திரையிடப்பட்டிருக்கும் திரைப்படத்தை பற்றி நிறையப் பேசுவார்கள். அது பற்றிய செய்தியை பரிமாறிக்கொள்வார்கள். இலங்கை வானொலியில் திரைப்படப்பாடல்கள், திரைப்பட ஒலிபரப்பு, விளம்பரங்கள் என்று ஏதாவது எப்போதும் காதில் விழுந்துகொண்டே இருக்கும். ஆக மொத்தம் திரைப்படம் என்பது எதிலும், எப்போதும் எங்கள் அன்றாட வாழ்கையில் நீக்கமற நிறைந்திருக்கும். இதனால் என் இளமைப்பருவத்தில் நிகழ்ந்த பல சம்பவங்கள் திரைப்படங்களை நினைவு படுத்துவதாகவும் அல்லது திரைப்படங்கள் சில குறிப்பிட்ட சம்பவங்களை நினைவு படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

இப்படித்தான் ஒரு நாள் நானும் சின்னண்ணாவும் ஜெமினிகணேசனின் ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படம் பார்த்துவிட்டு வின்சர் படமாளிகையை விட்டு வெளியே வந்தால் பெரும் மழை பெய்துகொண்டு இருந்தது. மழை விட்டுவிடும் என்று கொஞ்சம் நின்று பார்த்தோம். மழை என்னவோ விடுவதாக இல்லை. வீட்டுக்கு ஒரு பத்து நிமிட ஓட்டம்தான். சரி ஓடுவோம் என்று முடிவுசெய்து ஓட ஆரம்பித்தோம். கஸ்தூரியார்வீதியைக் கடந்து நாவலர்வீதிக்கு வருமுன் மழைவெள்ளத்தில் வைத்த என் வலது பாதத்தில் ஏதோ மிதிபட உயிர் போகும் வலி! அலறியபடி குனிந்து பார்த்தால் நான் மிதித்தது ஒரு சோடாப்போத்தலின் உடைந்த அடிப்பாதி! மழையில் நன்கு ஊறியிருந்த வெறும் பாதத்தில் நல்ல ஆழமாய் வெட்டு விழுந்திருந்தது. இரத்தம் பெருகி ஓடத்தொடங்கியது. அதே நேரத்தில் பெரும் அழுகையொலியொன்று, மழை சத்தத்தையும் மீறி அருகே கேட்டது. பொறுக்க முடியாத வலியோடு வீதியின் எதிர்பக்கமிருந்த என் பாடசாலை நண்பன் மகேஸ்வரன் வீட்டைப் பார்த்தேன். அங்கிருந்துதான் அழுகையொலி வந்துகொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாது சிலர் மகேஸ்வரன் வீட்டுக்குள் விரைந்து போய்க்கொண்டு இருந்தார்கள். என்னவாக இருக்கும் என்ற கவலை ஒரு புறமும் என் காலில் ஏற்பட்ட காயத்தின் வலி ஒரு புறமுமாக என்ன செய்வதென்று திகைத்து நிற்க, சின்னண்ணா என்னை கைத்தாங்கலாக வீடு கொண்டு வந்து சேர்த்தார். உடனே யாழ் அரசினர் வைத்தியசாலைக்கு சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டேன். போகும் வழியில் மீண்டும் மகேஸ்வரன் வீட்டைக்கடந்து சென்றபோது அந்த அதிர்ச்சியும் ஆழமான கவலையும் தரும் செய்தி காதில் விழுந்தது. மகேஸ்வரன் இறந்து போனான்!

தொடரும்…

மோகன் (2010-11-17)

COMMENTS