எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 7

எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 7

அத்தியாயம் 7

திரைப்படங்களின் தாக்கம்! (தொடர்ச்சி)

மகேஸ்வரனின் திடீர் மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியும் கவலையும் தந்தது. அவன் இயற்கையிலேயே மிகவும் பலவீனமானவனாயும், மற்றைய சிறுவர்களைப் போல நீண்டநேரம் ஓடியாடி விளையாட முடியாதவனாயும் இருப்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். கொஞ்ச நேரம் விளையாடினால் உடனே மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும். அவனுக்கு இதயநோய் இருப்பதாக பின்னர் அறிந்தேன். அதனால் அவன்மீது எனக்கு ஒரு பரிதாப உணர்வும், அதைத் தொடர்ந்து அவனுடன் நல்ல நட்பும் உருவாகியிருந்தது. வகுப்பறையில் எனக்கு அருகில் இருப்பான். மதியஉணவு, பால், பழரசம், பிஸ்கட் என்று அவன் வீட்டிலிருந்து ஒருவர் கொண்டு வருவது வழக்கம். வீட்டில் அவன் செல்லப்பிள்ளை. திரைப்படங்கள் பற்றி நாங்கள் நிறையப் பேசுவோம்.

நான் நாவலர் பாடசாலையில் நான்காவது வகுப்பில் படித்தத காலம் அது. வகுப்பில் யாராவது ஒருவன் முதல்நாள் மாலை ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்து விட்டால் ஆசிரியர் ஒருவரும் இல்லாதபோது எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொள்வோம். அவன் திரைப்படம் முழுவதையும் காட்சிவாரியாகச் சொல்வான். நாங்கள் ஆவலாகக் கேட்போம். ஒரு கதாசிரியரோ அல்லது இயக்குனரோ எப்படி தயாரிப்பாளருக்கு கதை சொல்வாரோ அதே போல இருக்கும். சிலர் இதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் திரைப்படத்தை விபரிக்கும்போது எங்கள் மனக்கண்ணிலே காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கச்சிதமாக விரியும். போதாக்குறைக்கு சிலர் வாயால் இசை கூடச் சேர்ப்பார்கள். இந்த சம்பவங்களை நான் எழுதும்போது எனக்கு நினைவுக்கு வருபவன் என் மைத்துனன் வசந்தன். திரைக்கதை ஆகட்டும் அல்லது அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகள் ஆகட்டும் அதை விபரிப்பதில் வசந்தனுக்கு நிகராக, நான் அறிந்தவரை எங்களுக்குள் வேறு யாருமில்லை. அவ்வளவு உயிர்ப்போடும், பிசிறில்லாத ஏற்ற இறக்க உச்சரிப்போடும், கைதேர்ந்த நடிகர்களின் தரத்தோடும் இருக்கும்.

பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் நாங்கள் இருவரும் ஒன்றாக உதைபந்தாட்ட, துடுப்பாட்டக் குழுக்களில் விளையாடியபோது எப்போதும் இவனைச் சுற்றி ஒரு கூட்டமிருந்து சிரித்துக்கொண்டே இருக்கும். ‘டட்டடாங்’ என்ற  சொல்லிசையோடு சேர்த்து கதை சொல்வதால் வசந்தனுக்கு ‘டட்டடாங் வசந்தன்’ என்ற ஒரு பட்டப் பெயரே உண்டு. இந்த விடயம் கல்லூரியதிபர் திரு. சபாலிங்கம் வரை பரவி, “எங்கே அந்த டட்டடாங்கை வரச் சொல்லுங்கள்!” என்று வசந்தனை வரவழைத்து நகைச்சுவைத் துணுக்குகளை  அவரே கேட்பதுண்டு என்றால் பாருங்கள்!

அப்போதே, அந்த சின்ன வயதிலேயே, எங்கள் வகுப்பில் சிலர் மாலைநேரங்களிலும், ஓய்வு நாட்களிலும் சாக்கு தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் சொந்தமாகவே உழைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். ஒரு சாக்குத் தைத்தால் ஐந்து சதங்கள் கிடைக்கும். நாங்கள் எல்லாம் பாடசாலை முடிந்ததும் விளையாடப் போய்விடுவோம். ஆனால் எங்கள் வகுப்பில் படித்த சில அயல் சிறுவர்கள் சாக்குத் தைக்கும் வேலைக்குப் போய்விடுவார்கள். ஒரு மாலை முழுதும் வேலை செய்தால் இரண்டுரூபாயளவில் அவர்கள் உழைப்பார்கள். ஒரு பழைய திரைப்படம் பார்க்க 35 சதம் போதும். புதிய படமானால் 65 சதம். இவர்களிடம் பணப்புழக்கம் நன்றாகவிருக்கும். வீட்டிலும் பார்க்க கடைகளிலேயே அதிகம் சாப்பிடுவார்கள்.

நினைத்த நேரம் திரைப்படம்பார்க்கும் வாய்ப்பும், வசதியும் இவர்களுக்கு இருந்தது. இவர்களின் குடும்பத்தில் எல்லோருமே உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்குள் தங்கள் தாய்மொழியான ‘தெலுங்குமொழி’ பேசுவார்கள். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவில் ஆந்திரா மாநிலத்திலிருந்தோ வேலைவாய்ப்புத் தேடி இலங்கைக்குக் குடிபெயர்ந்தவர்கள். மிகச் சிறந்த உழைப்பாளிகள். தேனீக்களைப்போல கூட்டாக, வேலைகளை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டு எந்நேரமும் சுறுசுறுப்பாக உழைப்பார்கள். இந்தத் தொழில் ஈடுபாடு அவர்கள் சார்ந்த இளம் தலைமுறையினரின் கல்வியை வெகுவாகப் பாதித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் கூட இவர்கள் சார்ந்த குடும்பங்களின் உழைப்பு ஒரு பெருமைக்குரிய விடயமாகவே என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன். திரைப்படங்கள் பற்றிய பேச்சு வரும்போது எல்லாம் பெரும்பாலும் அது எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி பற்றியதாகவே இருக்கும்.

தொடரும்…..

மோகன் (2011-01-27)

COMMENTS