எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 5

எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 5

அத்தியாயம் 5

1958 இனக்கலவரத்தின் தொடர்ச்சி

எதிர்வரும் ஆபத்தை நன்கு உணர்ந்து கொண்ட ஐயா, பூட்டிய கதவை நோக்கி விரைந்து ஓடி அதைத் தன் முழுப் பலத்தையும் பிரயோகித்துத் தள்ளினார். அதிர்ஷ்டவசமாக முன்னால் ஓடியவர்கள் கதவைச் சாத்தினார்களே தவிர பூட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பூட்ட முன்னரே ஐயா கதவைத் தள்ள, கதவும் கொஞ்சம் திறந்து கொள்ள, ராணுவம்தான் என்ற எண்ணத்தில் உள்ளே போனவர்கள் மீண்டும் கதவை பலமாகத் தள்ளி பூட்ட முற்பட்டார்கள். அந்தப் பலமான கதவு ஐயாவின் முழங்கால் ஒன்றில் பலமாக மோதியது. அதையும் பொறுத்துக்கொண்டு, ஐயா உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கதவைத் திறக்க வலுவாகப் போராடினார். இதற்குள் கதவு இடுக்கால் ஐயாவை அடையாளம் கண்டுகொண்டவர்கள் பிடியை சற்றுத் தளர்த்த, ஐயா சின்னக்காவீட்டுள் நுழைந்து கொண்டார். கைகளில் யாரும் சிக்காத சீற்றத்தில் ராணுவத்தினர் கதவை பலமாக உதைத்தார்கள். சிங்களத்தில் உரக்கத் திட்டினார்கள். பின்னர் மெல்ல அங்கிருந்து போய்விட்டார்கள்.

அன்றைய ராணுவம் இன்றைய ராணுவத்திலும் பார்க்க கொலைவெறி சற்றுக் குறைந்தவர்களாக இருந்ததாலும், அவர்கள் கைகளில் சிக்காமல் சாதுரியமாக ஐயா விரைந்து ஓடியதாலும் பெரும் ஆபத்திலிருந்து அவரால் அன்று தப்பமுடிந்தது. அன்றிலிருந்து அம்மாக்கள் எல்லோரும் கூட்டாக ஊரடங்குச்சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இராணுவத்திலும் பார்க்க மிகத் திறமையாக அதை செயற்படுத்தினார்கள்! ஐயாக்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது! அவர்களால் வீட்டைவிட்டு அசைய முடியவில்லை.

சின்னக்காவீட்டுக் கதவின் மகிமை அன்றுதான் எல்லோருக்கும் முழுமையாகப் புரிந்திருக்கும். பழைய காலத்துக் கதவு. ‘பர்மா’ தேக்கோ அல்லது எங்களூர் முதிரையோ தெரியாது. நல்ல பாரமான, மொத்தக் கதவு. ராணுவ உதைகளுக்கெல்லாம் சற்றுக் கூட அசைந்து கொடுக்கவில்லை! ஐயாவுக்கு முழங்காலில் விழுந்த அடியின் தாக்கம் மிக மோசமாகவிருந்தது. ஒட்டகப்புலத்தாரிடம் பல முறை சென்று ‘புக்கை’ கட்டி வைத்தியம் பார்க்க வேண்டியிருந்தது. சரியாக நடக்க முடியவில்லை. வேலைக்குபோவது கூட பெரிதாகத் தடைபட்டுப் போனது. அம்மாவின் மற்றும் குடும்பத்தாரின் அன்பான கவனிப்பும், நாட்டுவைத்திய சிகிச்சையும் காலில் ஏற்பட்ட பாதிப்புக்கு இதமாக இருந்தாலும், வருடங்கள் பல சென்ற பின்னரும் முழங்கால் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை. எங்கள் வீட்டுக்கு அருகாமையிலிருந்த காலம்சென்ற சட்டத்தரணி காராளசிங்கம் என்பவரின் பங்களாவில் வேலைபார்த்த ‘லக்கி’ என்ற சிங்களவரின் கை கூட ஒரு முரட்டு ராணுவத்தினனால் முறிக்கப்பட்டது. அவர் சிங்களத்தில் கதறிய பின்னரே விட்டார்கள். சில வாரங்களில் நாடு சுமுகநிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பியது.

1958 இனக்கலவரம் பலருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்புகளையும், தன்மான உணர்ச்சியுடைய தமிழர்களுக்கு பெரும் மனவுளைச்சலையும், மனங்களில் மிக ஆழமான வடுக்களையும் ஏற்படுத்தியது. இந்த இனக்கலவரத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு ஏற்பட்ட மானபங்கம், கொடுமைகள் என்பன யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலையில் 1954ம் வருடம், நவம்பர் 26ம் திகதி பிறந்த, சிறுவன் ஒருவனுக்கு மிகப் பெரிய பாதிப்பை அவன் மனதில் ஏற்படுத்தியது! அந்த நாளின் காலநிலை அறிக்கை, வானொலியில் இப்படி இருந்திருக்கலாம்.
“இன்று பெரும் மின்னலோடும், பேரிடியோடும் கூடிய பலத்த அடைமழை, வடமாகாணத்தின் வடகிழக்குப் பிரதேசத்திலிருந்து வீசும் சூறாவளிக்காற்றோடு ஆரம்பித்து, இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் ஊடுருவி தென்னிந்தியாவின் தமிழகக்கடற்கரைப் பிரதேசங்களையும் கூட மையம் கொள்ளவுள்ளது”.

அந்த பாதிப்பின் விளைவுகளை, ஏறத்தாள 25 வருடங்களின் பின்புதான் முழு உலகமே புரிந்து கொள்ள ஆரம்பித்தது. அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும், அதன் விளைவாக ஒன்றன்பின் ஒன்றாக விரிந்த சம்பவங்களும், நடந்தேறிய மாற்றங்களும் எதிர்வரும் காலத்தில் இலங்கைச் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு கட்டாயம் உருவானது. ஊர்ந்து சென்ற ஒரு எறும்பையும் அதனருகே ஓடிய சுண்டெலி ஒன்றையும், தரையில் படுத்திருந்து ஒருவன் பார்த்தான். அவனுக்கு சுண்டெலி பிரமாண்டமாகத் தெரிந்தது. சற்றே தலை நிமிர, அருகில் கட்டியிருந்த கோயில்யானை சுண்டெலியை விட மிகப் பிரமாண்டமாகத் தோன்றியது. இதைப்போலவே காலப்போக்கில் இலங்கைத்தீவில் தமிழருக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட வன்முறையின் அளவும் ஒன்றைவிட ஒன்று பெரிதாகவும், மோசமானதாகவும் அமைந்தது. அப்போதெல்லாம் எனக்கு ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் பல கனவுகள் அடிக்கடி வந்து போகும்.

“ஒரு மதம் பிடித்த யானை ஆக்ரோசமாக, காட்டுமரங்களை எல்லாம் தள்ளி விழுத்தியவாறு ஓடும். அந்த யானை திரும்பும்போது பார்த்தால், அதன் முகத்திலிருந்து பெருமளவில் இரத்தம் ஓடும். தும்பிக்கை அடியோடு துண்டிக்கப் பட்டிருக்கும்!”

“பாலமொன்றில் தன்னந்தனியாக ஆற்றைக் கடந்து நான் போகும்போது திடீரென்று ஆற்றில் வெள்ளம் பெருகிக் கட்டுக்கடங்காமல் ஓடும். பாலத்தின் இரு பக்கமும் உடைந்து வெள்ளத்தோடு அடிபட்டுப் போகும். தொடக்கமும் முடிவுமில்லாத பாலத்தில் செய்வதறியாமல் திகைத்து நிற்பேன்.”

“திடீரென்று பகல்நித்திரை கலைந்து எழுந்து வானத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகவிருக்கும். வானத்திலிருந்து நீலவர்ணத்தை யாரோ பிரித்து எடுத்துப் போயிருப்பார்கள். நீலத்தை இழந்த வானத்தின் கோலம், புது மணப்பெண் ஒருத்தி பூவையும், குங்குமத்தையும், தாலியையும் பறிகொடுத்து நிற்பது போலிருக்கும்.”

இவைகளின் அர்த்தம் அப்போது எனக்குப் புரிந்திருக்கவில்லை!
தும்பிக்கையை இழந்து தன் வாழ்வின் ஆதாரத்தையே தொலைத்து நிற்கும் யானையைப் போல…
ஆற்றைக் கடக்க பாலத்தை நம்பிப்போனபோது பாலமே நிலைகுலைந்து நின்றது போல…
வாழ்க்கையின் வசந்தகாலத்தில் காலடி எடுத்து வைக்கும் புது மணப்பெண்ணை புயலும் சூறாவளியும் ஆரத்தி எடுத்து வரவேற்க வந்து நின்றது போல…
இவையெல்லாம் எங்கள் இனம் இப்போது சந்தித்திருக்கும் அவலத்திற்கான ஆரம்ப அறிகுறிகளோ?

தொடரும் …

மோகன் (2010-11-10)

COMMENTS