எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 3

எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 3

அத்தியாயம் 3

‘புதுவரவு’

ஐயாவிற்கும், ஜவகரின் அப்பாவிற்கும் பின்னாலிருந்து சின்ன நாய்க்குட்டி ஒன்று எகிறிக் குதிச்சு ஓடி வந்தது. அழகு என்றால் அழகு அப்படி ஒரு அழகு! வெள்ளை நிறத்திலே, கடும் மண்நிற வர்ணத்தை தூரிகையாலே எடுத்து உடலில் அங்கங்கே திட்டு திட்டாய் பூசினது போல ஒரு நிறம். துரு துருவென்ற சின்னக் கண்கள், அழகான சின்ன நாசி. எங்கள் எல்லோருக்குமே பல வருடங்கள் பழக்கமானது போல பாரபட்சமின்றி எல்லோர் மேலும் தாவித் தாவி குதித்தது. முதல் சந்திப்பிலேயே எல்லோரையும் அந்த குட்டி ஜீவன் வெகுவாகக் கவர்ந்து கொண்டது. ஐயா அதை யாரிடமாவது வாங்கி வந்தாரா அல்லது இவர்கள் பின்னாலேயே எங்கிருந்தோ வந்து ஓட்டிக்கொண்டதோ தெரியாது. ஒரு வழியாய் நாய்க்குட்டிக்கு எங்களுடன் தங்க வீட்டில் அனுமதி கிடைத்தாயிற்று. அம்மா ஒரு சின்னத்தட்டில் பால்கரைத்து வைக்க, தன் சின்ன நாக்கை நீட்டி அழகாக அதை நக்கிச் சாப்பிட்டது. அன்றைக்கு மாலை முழுவதும் அதனோடுதான் எங்கள் எல்லோருக்கும் விளையாட்டு. பொழுது மிகவும் ஆனந்தமாய் கழிந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்து எழுந்தபோது நாய்க்குட்டியை வீட்டுக்குள் காணவில்லை! அதிர்ச்சியாருந்தது! எங்கே போயிருக்கும்? மெல்ல பின்வளவுக்கு போனபோது அவரை ஒரு தென்னைமரத்தோடு கட்டி வைத்திருந்ததைப் பார்த்தேன். என்னைக் கண்டவுடனேயே சின்ன வாலை மெல்ல ஆட்டி வரவேற்றது. காலை வணக்கமோ?

இப்போது எனக்கு நாலு அல்லது ஐந்து வயதிருக்கலாம். எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாததால் நாளையப் பொழுதைப் பற்றியோ அல்லது இழப்புகள் எதுவுமேற்படாததால் நேற்றைய பொழுது பற்றியோ கவலை ஏதுமில்லாத வயது. எனக்கு மூத்தவர்களான அக்கா, பெரியண்ணா, சின்னண்ணா எல்லோரும் பள்ளிக்கூடம் போய்விடுவார்கள். ஐயாவும் ஜவகரின் அப்பாவும் வேலைக்குப் போய்விடுவார்கள். வீட்டில் அம்மா, நான், சந்திரா, தேவி மற்றும் ஜவகரின் அம்மா, தங்கை, ஜவகர் மட்டுமே இருப்போம். தேவி சிறு குழந்தை. ஒரு வயது கூட இருக்காது. பார்க்க நல்ல அழகான ‘குண்டு பாப்பிள்ளை’ போலிருப்பா. சந்திராவிற்கு என்னை விட இரண்டுவயது குறைவு. ஒரு மூன்று சில்லு சைக்கிளில் வளவெல்லாம் சுத்திச் சுத்தி வருவான். ஜவகர் பார்க்க துறு துறுவென்று, எப்போதும் எங்களுடனேயே இருப்பான். இவர்கள் எல்லோரையும் மேய்ப்பதுதான் என் வேலை.

வெள்ளிக்கிழமை அல்லது கோயில் விரதம் அல்லது ஏதாவது பண்டிகைக் கொண்டாட்டம் என்றால் அம்மா வழக்கத்தைதைவிட மிக நேரத்தோடு அதிகாலையில் எழுந்து விடுவா. பனியோ, எலும்பை உருக்கிற குளிரோ தலையில் தோய்ந்து குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துவாயை சுற்றிக்கொண்டு, முற்றத்தில் கோலம் போட்டு அதில் பசுச்சாணத்தால் ‘பிள்ளையார்’ ஒன்று பிடித்து, அதன் உச்சந்தலையிலே செவ்வரத்தம்பூ ஒன்றை வைத்து வணங்குவா. பிறகுதான் மற்றதெல்லாம். சாதாரண நாளானால், அதுவும் அன்றைக்கு மச்சச்சமையல் என்றால், சமையல்வேலை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டுதான் குளியல், தோயல் எல்லாம். மீன் வாங்கினால் அதை வெட்டிக் கழுவித் துப்பரவு செய்வது பின்வளவில்தான். அந்த நேரத்தில் வெட்டும் மீனைக் கவ்விக்கொண்டு போக காகங்கள், நாய்கள், பூனைகள் எல்லாம் பேயாய் அலையும்! அங்கே காவல்காரனாய் கையிலே தடியோடு நிற்பது நான்தான். கொஞ்சம் அசந்தால் அவ்வளவுதான் கழுவிவைச்ச மீன்துண்டெல்லாம் காற்றோடு போய்விடும்.

வீட்டுவளவு ஒடுக்கமானது ஆனால்நீண்டது. நீண்டு உயர்ந்த தென்னை மரங்கள் நிறைய நெருக்கமாக இருந்ததால் பின்வளவெல்லாம் சூரியவெய்யில் விழாமல் நிழலாகவே இருக்கும். கிணத்தோரம் ஒரு தொகை செவ்வரத்தம் பூச்செடிகள், பக்கத்தில் கொஞ்சம் நந்தியாவட்டை, பட்டிப்பூ என்று பார்க்க மிக அழகாக இருக்கும். அம்மா இஞ்சிக்கிழங்கு வாங்கினால் சமைலுக்கு பாவித்தது போக மீதியை கிணற்றோரம், செவ்வந்திப்பூச்செடியருகே மண்ணில் புதைத்து ஒரு கல்லை அடையாளம் வைப்பது வழக்கம். காரணம் கேட்டால், இஞ்சிக்கிழங்கு வளர்ந்து பெரிதாகும், கடையில் வாங்கவேண்டியதில்லை என்பா. அது உண்மைதானா என்றறியும் ஆவலில், அம்மாவுக்கு தெரியாமல் ஒவ்வொரு நாளும் மண்ணைக்கிண்டி அதை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் மண்ணுள் புதைத்து விடுவோம். அதொன்றும் அப்படி வளர்ந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை!

நான் பிறந்தது காங்கேசன்துறை வீதியிலுள்ள 395 இலக்க வீட்டில்தான் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அந்த வீடு மாவிட்டபுர உறவினர் ‘பேபியக்கா’ குடும்பத்தாருக்கு சொந்தமானதாக இருந்தது என்று ஐயா சொன்னதாக ஞாபகம். பிறகு யார் யாரோ கைகளுக்கு மாறி கடைசியில் கனகசபாபதி என்ற மலேசியாவில் வேலை பார்த்து ஒய்வு பெற்ற ஒருவரிடம் கைமாறியது. சில வருடங்களின் பின்னால் அத்தான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வேலை மாறி வந்தபோது அதே வீட்டை அக்கா குடும்பம் வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.

நான் பிறந்த வீடு பற்றிய ஞாபகம் எதுவும் எனக்கு இப்போது இல்லை. ஆனால் அந்தவீட்டிலிருந்தபோது எனக்குவலது கமக்கட்டில் இருந்த கழலையொன்றை சத்திரச்கிச்சைமூலம் அகற்றியதாகவும் அதற்கான நேர்த்திக்கடன் ஒன்று ‘நயினாதீவு நாகபூசணியம்பாளுக்கு’ செய்ய வேண்டி இருப்பதாகவும் அம்மா அடிக்கடி சொல்வா. இன்னுமொரு சம்பவம். எங்களுடன் குடியிருந்த, என் வயதொத்த ‘நித்தி’, தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்றின்போது எரிகிற மத்தாப்பு ஒன்றை என் பின்னால் பிடிக்க, என் காற்சட்டை நெருப்புப்பற்றி ‘பின்பக்கம்’ நெருப்புக்காயத்திற்கு உள்ளானதாகவும் சொல்லக் கேள்வி! அதோடு என் பெயருக்குப் முன்னால் ‘தீப்பொறி’ என்ற அடைமொழியைச் சேர்த்திருக்க வேண்டும்!

வருடங்கள் மெல்ல மெல்ல நகர, எப்படியோ 1958 பிறந்தது. எனக்கு அப்போது ஐந்து வயது. எல்லோர் வாழ்விலும் ஒரு பெரும் சூறாவளி வீசப்போவதை மே 22 வரை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தொடரும்……

மோகன் (2010-11-03)

(Visited 53 times, 1 visits today)

COMMENTS