எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 2

அத்தியாயம் 2
‘அசாத்திய திறமை’
 

கொஞ்ச நேரத்தில் ஆட்கள் கூடிவிட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள், வழியால் போனவர்கள், வந்தவர்கள் என்று ஒரு தொகை சனம். மீட்பு வேலை யாருடைய தலைமையில் நடந்ததோ தெரியாது ஆனால் துரித கதியில் நடந்தது. சிவகுரு மாமா மேல் விழுந்திருந்த மண்சுவர் இடிபாடுகள் சட சடவென்று அகற்றப்பட்டன. மெலிதாக முனகல் சத்தம் கேட்டது, அவர் உயிரோடு இருப்பது உறுதியானது. நிலைமை எல்லோருக்கும் சற்று நிம்மதியளித்தது. எங்களை அருகே நெருங்க விடாமல் அம்மா பிடித்துக் கொண்டா. கந்தவேலண்ணையின் அம்மா கதறி அழுதபடியே இருந்தா. சற்று நேரத்தில் ஒரு மோட்டார்வாகனம் வந்தது. அவரைத் தூக்கி வாகனத்தில் போட்டுக்கொண்டு யாழ் வைத்தியசாலையை நோக்கி விரைந்தார்கள்.


சுற்றி நின்றவர்கள் இடிந்த சுவரைச் சுற்றிச் சுற்றிச் பார்த்தார்கள். தங்களுக்குள் ஏதோ கதைத்துக் கொண்டார்கள். கதைத்தது எஞ்சியிருந்த சுவரின் பாதுகாப்பு பற்றியதாக இருக்கலாம். ஐயாவும் சிவகுரு மாமாவுடன் வைத்தியசாலைக்குப் போனாரா என்று எனக்கு இப்போ ஞாபகமில்லை. அம்மாவும் பக்கத்து வீட்டுப் பெண்களும் வள்ளியம்மையக்காவை அரவணைத்து ஆறுதல் சொல்லிக் கவனித்துக்கொள்ள, எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனார்கள். சிவகுரு மாமாவிற்கு என்ன நடக்குமோ என்ற கலக்கத்தோடு நானும் படுக்கப்போனேன்.

நித்திரை என்னவோ அவ்வளவு சுலபமாய் வருவதாயில்லை. மங்கிய சிமினி விளக்கின் ஒளியிலே, சுவரில் ஒரு பல்லி பதுங்கிப் பதுங்கி ஒரு சிறு பூச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. அப்பாவிப் பூச்சியோ தன்னை எதிர்கொள்ளும் உயிராபத்தை உணராமல் உறங்கிக் கொண்டிருந்தது. ஓரிரு விநாடிகள்தான் சென்றிருக்கும்.. பூச்சியை நெருங்கிவிட்ட பல்லி தன் பசையான நாக்கை சடாரென்று நீட்டி ‘லபக்’ என்று பூச்சியை உள்வாங்கிக் கொண்டது. எனக்கு பூச்சியின் பரிதாப முடிவை நினைத்து கவலையாகவும், கண்ணெதிரே நிகழ்ந்த கொலையைத் தடுக்க முடியாது போன எனது கையாலாகாதனத்தை நினைத்து வெட்கமாகவும் இருந்தது. கொஞ்சம் ஆழமாக யோசித்தபோது பூச்சிக்கு பாதுகாப்பு வழங்காத ‘அம்மாப்பூச்சி’ மேலும், பசித்த பல்லிக்கு சாப்பாடு போடாத ‘அம்மாப்பல்லி’ மேலும்தான் படு கோவம் கோவமாய் வந்தது. அம்மாவின் கைகள் என்மேல் விழுந்து என்னை அணைத்துக்கொள்ள நித்திரையாய்ப் போனேன்.


முதல்நாள் இரவு நடந்த கலவரங்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதுபோல் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு, சூரியன் கிழக்கு அடிவானத்திலிருந்து மெல்ல மெல்ல தலையைத் தூக்கினான். இடிந்த சுவருக்கருகே புதிதாக ஒரு சனக்கூட்டம் கூடியிருந்தது. நடந்த சம்பவத்தை யாரோ ஒருவர் தானே முழுவதும் நேரில் நின்று பார்த்ததைப்போல விளக்கிக்கொண்டிருந்தார். கடைசியாக வைத்தியசாலையிலிருந்து வந்த தகவலின்படி சிவகுரு மாமாவின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, ஆனால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாகக் கேள்விப்பட்டோம். அம்மாவுடன் நானும் கூட ஒரு முறை வைத்தியசாலைக்கு சென்று அவரைப் பார்த்துவந்தேன்.


நாட்கள் சில மெல்ல நகர, ஒரு நாள் சிவகுருமாமாவை வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தார்கள். அவருடைய தொண்டையில் ஒரு சிறு துவாரமிட்டு வட்டமான ரப்பர் துண்டொன்று பொருத்தியிருந்தார்கள். சுவாசத்தை இலகுவாக்க வைத்தியர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாக ஐயா சொன்னார். அப்போதெல்லாம் அவரால் சுலபமாக கதைக்க முடியாமலிருந்தது. இந்த நிலைமை அவருடைய தொழிலை வெகுவாகப் பாதித்திருந்தது.

அவருடைய முக்கியமான தொழில் ‘தரகர்’ வேலை. சந்தையிலே வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து பொருளை விற்க உதவுவார். சன்மானமாக பொருளோ அல்லது பணமோ விற்பவரிடமிருந்து இவருக்கு கிடைக்கும். இப்போது அவரை நினைத்துப் பார்க்கிறேன்….இதொன்றும் சாமனியமான விசயமில்லை! நன்றாக கதைக்கத் தெரிந்திருக்க வேண்டும் (art of speech and expression). அன்றைய சந்தை நிலவரம் பற்றிய தெளிவான அறிவு அவசியம் (market study and knowledge), விரைவாக நிலைமையை ஆராய்ந்து உடனேயே முடிவு எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் (quick decision making). எல்லாவற்றுக்கும் மேலாக வாங்குபவர் விற்பவர் இரு சாராரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக இருக்க வேண்டும் (goodwill). சிவகுருமாமா இதிலெல்லாம் கைவந்தவராக இருந்தார். பல்கலைக்கழக பட்டப்படிப்பில்லாமலே தரகர் தொழிலில் மகத்தான வெற்றி கண்டிருந்தார். சிறு வயதில் என்னை ஆச்சரியப்படுத்திய சாதாரணமான ஒரு மனிதர் அவர். ஆனால் அசாத்திய திறமைகள் கொண்டவராக அவர் இருந்தார்.


அந்தக்காலத்தில் சந்தையைத் தேடி நாங்கள் போகவேண்டியதில்லை. சந்தையே எங்களைத் தேடி வீடு வரும்! மீன், கருவாடு, மரக்கறி, சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்பவர்கள் மற்றும் பழைய பேப்பர், போத்தில், உடுப்பு, பாத்திரம் வாங்குபவர்கள், என்று எல்லாமே எங்களிடம் வீடு தேடி வரும்! பொழுது விடிந்ததும் காலைக்கடன்களை துரித கதியில் முடித்துக்கொண்டு, காலை உணவையும் அருந்திவிட்டு குடும்பத் தலைவர்களெல்லாம் வேலைக்குப் போய் விடுவார்கள். வீட்டுச் செலவுக்கான காசை அம்மாக்களிடம் கொடுத்து விட்டுப் போவார்கள். அன்றைக்கு என்ன சமையல் என்ற தங்கள் விருப்பத்தையும் சொல்லிவிட்டுப் போவார்கள். அம்மாக்களே அனேகமாக மீன், கணவாய், நண்டு, றால், சுறா, மரக்கறி, அரிசி என்று அன்றாடம் வசதிப்பட்டதை வாங்கி சமையல் செய்வார்கள்.


ஐயாவிற்கு வீட்டிலிருந்தே தினமும் சாப்பாடு வேலைக்குப் போகும். ஐயா “சின்னத்துரை அண்ட் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தில் கணக்குப்பதிவாளராக நீண்ட காலம் வேலை பார்த்தார். ஜவகரின் அப்பாவும் ஒரே இடத்தில்தான் வேலை. அனேகமாக ஒன்றாகவே புறப்பட்டு, மாலை நேரம் ஆறுமணியளவில் சேர்ந்தே வீடு திரும்புவார்கள். அப்படி ஒரு நாள் அவர்கள் வீடு திரும்பும்போது ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது!

தொடரும்….

மோகன் (2010-07-09)

COMMENTS