எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 4

எங்கள் குடும்பம் பெருசு – தொடர் 4

அத்தியாயம் 4

1958 இனக்கலவரம்

இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழ் சிங்கள முரண்பாடுகள் பற்றி நான் முதன் முதலாக அறிந்து கொண்ட வருடம் 1958. சிங்களவர்களின் இனவுணர்வைத் தூண்டி அதனடிப்படையில் ‘சொலமன் பண்டாரநாயக்கா’ 1956 இல் இலங்கையின் பிரதமர் ஆனார். இவர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கணவர். சந்திரிகா குமாரதுங்காவின் தந்தை. கிறிஸ்தவரான இவர் புத்தமதத்திற்கு மாறியவர். பதவி ஏற்றவுடன் அவசர அவசரமாக ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை கொண்டு வந்தார். இந்த புதிய சட்டம் சிங்கள மொழிக்கு மட்டுமே அரசியல் தகமை வழங்கியது. வடக்கு-கிழக்கு பிரதேசத்தை தாயகமாகக் கொண்ட, இலங்கையின் சனத்தொகையின் ஏறத்தாள 30% அளவிலிருந்த தமிழர்களுக்கு இது பேரதிர்ச்சியை தந்தது! தமிழருடைய மொழி, கலை, கலாச்சாரம் மட்டுமல்லாமல் பொருளாதாரநிலை உட்பட எல்லாமே ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அன்றைய இலங்கையில் அல்லது மலரவிருக்கும் ‘ஸ்ரீலங்கா’ வில் எதிர்காலத்தில் வரவிருக்கும் உள்நாட்டு கலவரங்களுக்கும், ஈழவிடுதலைப் போரிற்கும் விதைக்கப்பட்ட முதல் விதையாகவே இதை நான் பார்க்கிறேன்.

சிங்களம் மட்டும்’ சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சி யாழ் அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகம் செய்தது. எங்கள் ஐயா உட்பட பல பொதுமக்கள் உணர்ச்சிபூர்வமாக கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை அகிம்சாவழியில் காட்டினார்கள். அதை சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இந்தியாவில் காந்திஜியால் ஏற்படுத்தப்பட சுதந்திர உணர்வலைகளின் தாக்கம் இலங்கையிலும் வெகுவாகப் பிரதிபலித்தது. காந்திகுல்லா அணிந்து அமைதியான வழியில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் குண்டாந்தடியால் அடித்தார்கள். தமிழர் வாழும் பிரதேசம் முழுவதும் ஒரு பதட்டம் நிலவியது. மோட்டார்வாகனங்களின் இலக்கத்தகடுகளில் தமிழ் ஸ்ரீ அழிக்கப்பட்டு சிங்கள ஸ்ரீ பலவந்தமாக எழுதப்பட்டது. ஒருவழியாக 1957 இல் சொலமன் பண்டாரநாயக்கா, எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் தலைமையிலான தமிழ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தைக்கு வந்தார். தமிழ் பிரதேசங்களில் தமிழை அரச மொழியாக ஏற்பதாக ஒத்துக்கொண்டு ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் கைச்சாத்தானது. புத்தபிக்குகள் அதை எதிர்த்தார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டி நோக்கி நடைப்பயணம் புறப்பட்டார். கைச்சாத்தான அதே வேகத்தில் அந்த ஒப்பந்தம் கைவிடவும் பட்டது!.

திருகோணமலையிலிருந்த பிரித்தானிய கடற்படைமுகாம் மூடப்பட்டதின் விளைவாக 400 தமிழ் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பையும், வாழ்விடவசதியையும் இழந்தார்கள். இவர்களை ‘பொலன்னறுவ’ வில் மீளக்குடியேற்ற அரசு எடுத்த முயற்சி சிங்கள இனவாதிகளுக்கு சீற்றத்தை தர, மீளக்குடியேற வரும் தமிழர்களைத் தாக்க, சிங்களக்காடையர் குழுக்களாகப் பிரிந்து ஆயத்தமானார்கள். வவுனியாவில் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக செய்தியொன்றும் வெளியானது. இதைத் தடுக்க சிங்களக்காடையர்கள் ஒன்றுகூடி ‘பொலன்னறுவ’ புகையிரதநிலையத்தில் தாக்குதல் நிகழ்த்தினார்கள். இதைத் தொடர்ந்து, மே 22 ம் திகதி இனக்கலவரத்தின் முதலாவது அத்தியாயம் தமிழரின் செங்குருதியால் எழுதப்பட்டது. மறுநாள், மே 23 ம் திகதி மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் ஒன்றும் தாக்கப்பட்டது. இருவர் உயிரிழந்தார்கள். ஆனால் சிங்களக்காடையர்கள் எதிர்பார்த்ததைப்போல் அதிக அளவில் தமிழர்கள் அதில் பயணம் செய்யவில்லை. தொடர்ந்து மே 24 ம் திகதி பொலன்னறுவ புகையிரதநிலையம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது இம்முறை புகையிரதநிலையம் ஏறத்தாள முற்றாகச் சேதமாக்கப்பட்டது. மே 25 ம் திகதி சிங்களக்காடையர்கள், பொலன்னறுவவிலும் அதன் சுற்றுப்புறத்தில் இருந்த பண்ணைகளிலும், கரும்புத்தோட்டங்களிலும் வேலை செய்துவந்த தமிழர்களைத் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார்கள். கரும்புத்தோட்டங்களுக்குள் குழந்தைகளுடன் ஓடி ஒளிந்த குடும்பங்களை அழிக்க தீ மூட்டப்பட்டது. கண்ணில் தென்பட்டவர்களை பொல்லுகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கினார்கள்.

‘ஹிங்குவார்கொடவில்’ எட்டுமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருத்தியின் வயிறு கிழிக்கப்பட்டு இரத்தப்பெருக்கில் அவள் சாக விடப்பட்டாள் என்ற செய்தி வந்தது. எழுபதுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். அப்போது பொலன்னறுவவில் ஒரு சிறிய காவல்துறை அலுவலகமே இருந்தது. தமிழரை பாதுகாக்க முயன்ற சிங்களக் காவல்துறை உத்தியோகத்தினரும் கூட காடையரின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மறுநாள் மே 26 ம் திகதி, 25 பேரடங்கிய இராணுவப்பிரிவு ஒன்று கலகத்தை அடக்க வந்தபோது அவர்களை எதிர் கொள்ள 3000 வரையான சிங்களக்காடையர்கள் தெருக்களில் கூடியிருந்தார்கள். இவர்களைக் கலைக்க நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் சொலமன் பண்டாரநாயக்காவின் வானொலிப்பேச்சு, தமிழர்களே கலவரத்தை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற எண்ணத்தை சிங்களவர்கள் மத்தியில் தோற்றுவித்தது. ‘சிங்கள ஆசிரியை ஒருவர் மார்பகங்கள் அறுத்து தமிழரால் கொல்லப்பட்டார்’என்பது உட்பட பல பொய்யான செய்திகள் வதந்திகளாக மின்னல் வேகத்தில் பரவின. வெறும் வதந்திகளை நம்பியவர்களால் ‘பழிவாங்கு படலம்’ ஆரம்பமானது. கொழும்பு, கண்டி, காலி போன்ற நகரங்கள் உள்ளடங்க இலங்கை முழுவதும் இனக்கலவரம் பெரிதாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

கோவில் ஒன்றை தீக்கிரையாக்க எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவ, சீற்றமடைந்த காடையர் கும்பல் அந்தக் கோவில் ஐயரை தெருவுக்கு இழுத்து, அவர் மேல் மண்ணெண்ணைய் ஊற்றி தீமூட்டிக் கொன்றார்கள். ஏறாவூரில் தமிழ்,சிங்கள மீனவசமூகத்தவர்கள் கடற்கரையில் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டார்கள். தமிழ் காடையர்கள் பாதைகளைத் தடை செய்து சிங்களவர் என்று கருதிய பயணிகளைத் மோசமாகத் தாக்கினார்கள். இதில் 56 சிங்கள மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழ்ந்ததாக நான் அறியவில்லை. சில சிங்கள வியாபாரிகளின் கடைகள் சேதமாக்கப்பட்டதாகவும், நாகவிகாரை தாக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

ஐந்து நாட்களாக தொடர்ந்த பாரிய கலவரங்களை தடுத்து நிறுத்தாமல், பொறுப்பற்ற போக்கில் நடந்து கொண்ட அரசு, மே 27 ம் திகதி நாடு தழுவிய அளவில் அவசரகாலச்சட்டத்தையும் அதன் கீழ் ஊரடங்குச்சட்டத்தையும் அறிவித்தது. தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டது. முக்கிய தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்த நாட்கள் மறக்கமுடியாதவை! கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் எங்கள் வீட்டுக்கு அருகாமையிலிருந்த ‘கந்தையாகடை’ யின் பின்கதவு திறக்கப்பட்டு இரகசியமாக வியாபாரம் நடந்தது. யாழ்ப்பாணவீட்டு, மற்றும் வளவுகளின் கட்டமைப்பு இதற்கு மிக மிக சாதகமாக இருந்தது. தெருவுக்குள் வராமலே வளவுகளுக்கால் வேறொரு தெருவுக்கு சுலபமாக வந்துவிடலாம். ஒன்று வேலி பாய வேண்டும், அல்லது வேலியிலுள்ள பொட்டுகளுக்கால் நுளைய வேண்டும். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுடன் உறவு நல்ல முறையிலிருந்தால் அதற்கு அடையாளமாய் வேலியில் ‘பொட்டு’ ஒன்று வைப்பார்கள். அதாவது ஒருவர் போய்வரக் கூடியதாக பெரிய துவாரம் ஒன்று வைப்பார்கள். அதனூடு புதினப்பத்திரிகை, சாப்பாடு, மளிகைச்சாமான்கள் எல்லாம் வீட்டுக்கு வீடு பரிமாறப்படும். போக்குவரத்தும் விமரிசையாக நடக்கும். ஒரு நல்ல நட்பின் அடையாளமாகவே இது விளங்கியது. எல்லோரும் வானொலியின் அருகாமையிலேயே எங்கள் பெரும் பொழுதைக் கழித்தோம். பெண்கள் கதிரைகளிலோ அல்லது ஏதாவது மரப்பெட்டிகளிலோ ஏறி நின்று வேலிக்கு மேலாக பக்கத்து வீடுகளுடன் செய்திகளை பரிமாறிக்கொள்வார்கள். ஆண்கள் இதற்கு ஒரு படி மேலே போய் மிக ஆபத்தான ஒரு வழிமுறையைக் கையாண்டார்கள்.

இரவிலே ஊரடங்குச்சட்டமிருந்ததால் தெருவிளக்குகள் எரியாது. வீட்டின் முன் புற விளக்குகளையும் அணைத்து விடுவார்கள். எங்கும் இருட்டாக, ஒரே நிசப்தமாக இருக்கும். ராணுவ கனரகவாகனங்களும், ஜீப்புகளும் எங்கள் வீடுகளைக் கடந்து போகும் சத்தம் மட்டும் கேட்டபடியிருக்கும். கதவுத் துவாரமூடாகவோ அல்லது வேலித் துவாரமூடாகவோ நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை சுவாரசியமாக அவதானிப்போம். சில சமயங்களில் ராணுவவீரர்கள் வாகனங்களை விட்டு குதித்து சுவர் ஓரமாக நடந்து சென்றும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். எங்கள் ஐயா, சின்னக்காவின் ஐயா, கந்தையாண்ணை, ஜெயமண்ணையின் மாமா, சிவகுரு மாமா, செல்வாவின் ஐயா இப்படிப் பல அயலவர்கள் ஒன்று கூடி நாட்டு நிலைமை பற்றி கதைப்பது வழக்கம். மாலையில் இருட்டியதும் சின்னக்கா வீட்டுத்திண்ணையில் கூடி இருந்து கதைப்பதும், ராணுவவாகனங்கள் வரும் சத்தம் கேட்டதும் சின்னக்கா வீட்டுக்குள் ஓடி ஒளிந்து, கதவைச் சாத்திக்கொள்வதும் வழமையாக இருந்தது. சின்னக்கா வீட்டுத்திண்ணைக்கு அருகே இருந்து பார்த்தால் வலது பக்கம் ‘மனோகரா’ படமாளிகைச் சந்திவரையும் தெரியும். ஆனால் வீதி சற்று வளைந்திருந்ததால் இடது பக்கம் தெய்வானையக்கா வீடுவரையே தெரியும். பன்றிக்கோட்டுப் பிள்ளையார்கோவிலைப் பார்ப்பதானால் தெருவின் மறுபுறம் போய் எங்கள் வீட்டிலிருந்து வலதுபுறம் பார்க்கவேண்டும். இப்படித்தான் ஒரு நாள் ஐயாவும் அவர் நண்பர்களும் ஊரடங்குச்சட்டத்தை அசட்டை செய்து இருட்டில் சந்தித்து கதைத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ராணுவவீரர்களின் சப்பாத்துச் சத்தம் மிகவும் அருகில் கேட்டது! உடனே சின்னக்காவின் வீட்டுக்கதவின் அருகில் இருந்தவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு விரைந்து ஓடிச் சென்று கதவைச் சாத்திவிட்டார்கள். ஐயா நிலைமையைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓட, நீட்டி உயர்த்திய துப்பாக்கிகளுடன் சில ராணுவவீரர்கள் ஐயாவை நெருங்கி விட்டார்கள்!

தொடரும்…

மோகன்  (2010-11-03)

COMMENTS