‘அந்த கறுப்புக் குடை’

‘அந்த கறுப்புக் குடை’

இந்தச் சிறுகதை அன்பான அப்பாக்களுக்குக் காணிக்கை!

சண்முகம் சித்தப்பா கையசைத்து விடைபெற்றார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உருவம் தெருவின் இருட்டில் மறைந்தது. கண்ணனின் 12 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பும் கடைசி விருந்தாளி அவர்தான். அம்மா கதவை மூடித் தாளிட்டாள். மேசையில் ஏராளமான பரிசுகள் பொட்டலங்களாக நிரம்பியிருந்தன. “பிரிக்கலாமா?” அம்மா கேட்டாள். கண்ணன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். வீட்டைத் துப்புரவு செய்து, அலங்கரித்து, முப்பத்தைந்து விருந்தாளிகளுக்கு விருந்து சமைத்து, அவர்களை கவனித்த களைப்பு அம்மாவின் முகத்தில் வியர்வை முத்துக்களாக அரும்பியிருந்தன. “வேண்டாம், அம்மா நீங்கள் களைத்திருக்கிறீர்கள் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள். நாளை பிரிப்போம்.” என்றான். அவனை அணைத்து முத்தமிட்ட அம்மா வரவேற்பறையின் விளக்கை அணைத்தாள். கண்ணன் தன் அறைக்குள் போனான். கட்டிலில் சாய்ந்தவனுக்கு நித்திரை வருவதாயில்லை. மங்கிய இரவுவிளக்கின் வெளிச்சத்தில் சுவர்மூலையில் சாய்ந்திருந்த அந்த கறுப்புக்குடை கண்ணில் பட்டது. உடனே அப்பாவின் நினைவு மனதில் எழுந்தது.

கண்ணனின் அப்பா இறந்து, மூன்று வருடங்களின் பின் கொண்டாடப்பட்ட முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் இது. கண்ணனின் 9வது பிறந்தநாளுக்கு அப்பா வாங்கித்தந்த ஒன்பது பரிசுப்பொருட்களில் இதுவும் ஒன்று. அப்போது கண்ணனுக்கு அந்தக் குடையைத் துளிகூடப் பிடிக்கவில்லை. “மகனின் பிறந்தநாள் பரிசாக, அசிங்கமான ஒரு கறுப்புக் குடையை வாங்கிக் கொடுக்கும் அப்பா உலகிலேயே நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்!” என்று அம்மா வேறு கேலி செய்தாள். அது அவன் நினைவுக்கு வந்தது. அப்பா சிரித்துக்கொண்டே ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் விரிந்த அந்தக் கறுப்புக் குடையையும் தூக்கிக்கொண்டு ஒரு சின்ன மகிழ்ச்சி நடனம் ஆடினார். அம்மா முகத்தைத் திருப்பி ஏதோ முணுமுணுத்தபடி போய்விட்டாள். கதவை மூடி, கண்ணனை கட்டிலில் படுக்கப்போட்ட அப்பா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

“கண்ணா! ஒரு காட்டிலே ஒரு எறும்புக்கூட்டம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. வழமைக்கு மாறாக முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று மழைகாலம் ஆரம்பித்தது. இயற்கையையும், காலமாற்றங்களையும் உணர்ந்து அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யும் திறமை எறும்பு போன்ற சிறு உயிரினங்களுக்கு உண்டு. மனிதன் சுற்றுச்சூழலை மோசமாக மாசுபடுத்துவதால், இப்போது காலநிலை மாற்றங்களும் சீராக வருவதில்லை. அதனால் அந்த எறும்புக்கூட்டமும் போதுமான உணவைச் சேமிக்கவில்லை. தங்கள் வளைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை”.

கண்ணனுக்கு அப்பா சொல்வதின் அர்த்தம் முழுதாகப் புரியவில்லை. ஆனாலும் அப்பாவின் அணைப்பும், அவர் வாயால் பின்னணியிசை சேர்த்து கதைசொல்லும் அந்தப் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. ‘உம்’ கொட்டி, கதையைச் சுவாரசியமாக கேட்டுக்கொண்டு இருந்தான். அப்பா கதையைத் தொடர்ந்தார். “ஒரு நாள் பெருமழை வந்தது. நாள் முழுவதும் தொடர்ந்து பெய்தது. எறும்புப் புற்றுகள், வளைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிந்தன. அந்த எறும்புக்கூட்டத்தில் உயிர் தப்பியது ஒரு அப்பா எறும்பும், ஒரு அம்மா எறும்பும், ஒரு கண்ணன் எறும்பும் மட்டுமே. அவை மூன்றும் நன்கு விரிந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய காளான்குடையின் கீழே ஏறின. அதை இறுகப்பற்றிப் பிடித்துக் கொண்டன. அதில் மறைந்து கொண்டதால் பெருமழையில் இருந்து தப்பிக் கொண்டன”.

“கண்ணா! நீ வளர்ந்து பெரியவனாகி உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ளும்வரை, எறும்புகளைக் காப்பாற்றிய காளான்குடை போல் உனக்கு நானும் அம்மாவும் பாதுகாப்பாக இருப்போம். அதை அடிக்கடி உனக்கு நினைவுபடுத்தவே இந்தக் குடை எங்கள் பரிசு.

கதவுக்கு பின்னால் மறைந்துநின்று, அப்பாவின் கதையைக் கேட்ட அம்மா தன்னை மறந்து கைதட்டும் ஒலி இப்போது கேட்டது.மூன்று வருடங்களின் முன்னர் அப்பா சொன்ன கதையின் அர்த்தம் இப்போது சற்று அதிகமாகவே கண்ணனுக்குப் புரிந்தது. கட்டிலில் இருந்து எழுந்தான். அந்தக் கறுப்புக் குடையை எடுத்தான். அதை அணைத்தபடியே கட்டிலில் சாய்ந்தான். “இதைவிட ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசை இனி யாராலும், எப்போதும் எனக்குத் தர முடியாது”. தனக்குத் தானே பேசிக்கொண்டான். அப்பாவின் இனிய நினைவுகளோடு நித்திரையாகிப் போனான்.

COMMENTS